பாலம் கட்ட வெட்டிய குழியில் மோட்டார் சைக்கிளுடன் விழுந்து தனியார் நிறுவன ஊழியர் சாவு


பாலம் கட்ட வெட்டிய குழியில் மோட்டார் சைக்கிளுடன் விழுந்து தனியார் நிறுவன ஊழியர் சாவு
x
தினத்தந்தி 17 Feb 2018 10:45 PM GMT (Updated: 17 Feb 2018 7:47 PM GMT)

சிறுகனூர் அருகே பாலம் கட்ட வெட்டிய குழியில் மோட்டார் சைக்கிளுடன் விழுந்து தனியார் நிறுவன ஊழியர் பலியானார்.

சமயபுரம்,

லால்குடி அருகே உள்ள குமுளூர் வள்ளுவர் தெருவைச் சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் வேல் முருகன் (வயது 33). எம்.சி.ஏ படித்த இவர் பெரம்பலூர் மாவட்டம், சிறுவாச்சூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் இரவு நேர பணிக்காக குமுளூரில் இருந்து சிறுவாச்சூருக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

சிறுகனூரில் உள்ள ஒரு தனியார் கம்பெனி அருகே புதியதாக பாலம் கட்டப்பட்டு வருகிறது. அந்தப்பணிக்காக வெட்டப்பட்டிருந்த சுமார் 10 அடி ஆழமுள்ள குழியில் எதிர்பாராத விதமாக வேல்முருகன் மோட்டார் சைக்கிளுடன் தவறி விழுந்தார். இரவு நேரம் என்பதால் அவர் விழுந்தது யாருக்கும் தெரியவில்லை. நேற்று காலை அவ்வழியே சென்றவர்கள் குழிக்குள் மோட்டார் சைக்கிளுடன் வேல்முருகன் விழுந்து கிடப்பதைக் கண்டு சிறுகனூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரேணுகாதேவி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இறந்து கிடந்த வேல்முருகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக லால்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த வேல்முருகனுக்கு ஆறு ஆண்டுகளுக்கு முன்புதிருமணம் நடைபெற்றுள்ளது. இவருக்கு மணிமேகலை (29) என்ற மனைவியும், ஒரு பெண் குழந்தையும் உள்ளனர்.

வேல்முருகனின் உடலை பார்த்து அவரது மனைவி மற்றும் உறவினர்கள் கதறி அழுதது அனைவரையும் கண்கலங்க செய்தது. இந்த விபத்து குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘பாலம் கட்டுமானப் பணி நடந்து கொண்டிருப்பதை அறிவிப்பு பலகை வைத்தோ அல்லது சிகப்பு துணியால் அபாய எச்சரிக்கை செய்திருந்தாலோ இந்த விபத்து நடந்திருக்காது. இதே போன்று அந்த பகுதியில் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய வகையில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் குழிகள் உள்ளன. இவற்றை மூடுவதற்கு அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறினர். 

Next Story