சிப்காட்டில் உள்ள குரோமிய கழிவுகளை அகற்றக்கோரி ஆர்ப்பாட்டம்


சிப்காட்டில் உள்ள குரோமிய கழிவுகளை அகற்றக்கோரி ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 18 Feb 2018 4:30 AM IST (Updated: 18 Feb 2018 2:01 AM IST)
t-max-icont-min-icon

ராணிப்பேட்டை சிப்காட்டில் உள்ள குரோமிய கழிவுகளை அகற்றக்கோரி வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே தமிழ்நாடு இளைஞர் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

வேலூர்,

ராணிப்பேட்டை சிப்காட்டில் 1975-ம் ஆண்டு தமிழ்நாடு குரோமியம் மற்றும் கெமிக்கல்ஸ் தொழிற்சாலை தொடங்கப்பட்டது. குரோமியத்தின் தாதுவில் இருந்து சோடியம் பை குரோமேட், குரோமியம் சல்பேட், சோடியம் சல்பேட் போன்ற ரசாயன பொருட்கள் தயாரிக்கப்பட்டு, விற்பனை செய்யப்பட்டு வந்தது. தொழிற்சாலையில் இருந்து ஒரு நாளைக்கு 32 மெட்ரிக் டன் திடக்கழிவு வெளியேற்றப்பட்டு அவை சுத்திகரிக்கப்படாமல் சேமிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் கடந்த 1989-ம் ஆண்டு தொழிற்சாலை மூடப்பட்டது. தொழிற்சாலையில் சேமிக்கப்பட்ட 2.15 லட்சம் டன் கழிவுகள் அகற்றப்படாமல் உள்ளது. எனவே, அப்பகுதியில் உள்ள நிலத்தடி நீர் மற்றும் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. குரோமியம் கலந்து வரும் தண்ணீரை குடிக்கும் கால்நடைகள், மக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

ஆர்ப்பாட்டம்

இந்த கழிவுகளை அகற்றக்கோரி தமிழ்நாடு இளைஞர் கட்சி சார்பில் ராணிப்பேட்டை சிப்காட்டில் உள்ள குரோமிய கழிவுகளை அகற்றக்கோரி வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு வடசென்னை மாவட்ட தலைவர் சுரேஷ் மாணிக்கம் தலைமை தாங்கினார். கட்சி நிர்வாகிகள் ஹேமாராணி, கோபி, தீபக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிர்வாகி பிரசன்னா வரவேற்றார்.

இதில் குரோமிய கழிவுகள் கலந்த தண்ணீர் நிரப்பிய பாட்டிலை கைகளில் ஏந்தியபடி, குரோமிய கழிவுகளை அகற்றக்கோரி கோஷங்கள் எழுப்பினார்கள்.

ஆர்ப்பாட்டத்தில் கட்சி நிர்வாகிகள் அகிலன், செந்தில்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Next Story