திருவொற்றியூரில் கட்டையால் அடித்து முதியவர் கொலை, தொழிலாளி கைது


திருவொற்றியூரில் கட்டையால் அடித்து முதியவர் கொலை, தொழிலாளி கைது
x
தினத்தந்தி 19 Feb 2018 4:45 AM IST (Updated: 19 Feb 2018 1:18 AM IST)
t-max-icont-min-icon

மீன்கடைக்கு கொட்டகை அமைப்பதில் ஏற்பட்ட தகராறில் கட்டையால் அடித்து முதியவர் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

திருவொற்றியூர்,

சென்னை புதுவண்ணாரப்பேட்டை ஏ.இ.கோவில் தெருவைச் சேர்ந்தவர் பாண்டியன் (வயது 61). இவருக்கு சொந்தமான இடம் திருவொற்றியூர் கார்கில் நகரில் உள்ளது. அதில் வீடுகள், கடைகள் கட்டி வாடகைக்கு விட்டு இருந்தார். அதே பகுதியைச் சேர்ந்த தொழிலாளி ராஜன் (55) என்பவருடைய மனைவி ராணி மீன்வியாபாரம் செய்து வந்தார். இதற்காக பாண்டியனுக்கு சொந்தமான வீட்டின் முன்பு மீன்கடைக்காக கொட்டகை அமைத்து இருந்தார்.

இதை அறிந்த பாண்டியன், நேற்று முன்தினம் மாலை அங்கு சென்று, தனது வீட்டின் முன்புறம் மீன் கடைக்காக அமைக்கப்பட்டு இருந்த கொட்டகையை பிரித்து எரிந்ததாக தெரிகிறது. இதனை ராஜன் கண்டித்தார். இதனால் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது.

ஆத்திரம் அடைந்த ராஜன், அருகில் கிடந்த கட்டையால் பாண்டியனை சரமாரியாக தாக்கினார். இதில் பலத்த காயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு பாரிமுனையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி முதியவர் பாண்டியன் பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து சாத்தாங்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து தொழிலாளி ராஜனை கைது செய்தனர். மேலும் இந்த கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story