ஆந்திராவில் தமிழர்கள் மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும்: வைகோ பேட்டி


ஆந்திராவில் தமிழர்கள் மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும்: வைகோ பேட்டி
x
தினத்தந்தி 19 Feb 2018 11:15 PM GMT (Updated: 19 Feb 2018 7:44 PM GMT)

ஆந்திராவில் தமிழர்கள் மரணம் அடைந்தது குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்று வைகோ கூறினார்.

கோவை,

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நேற்று கோவை வந்தார். விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது-

ஆந்திர மாநிலம் கடப்பாவில் 5 தமிழர்கள் ஏரியில் பிணமாக மிதந்த சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது. அவர்கள் அடித்து கொலை செய்யப்பட்டார்களா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு, ஆந்திர அரசிடம் விளக்க அறிக்கை பெற முயற்சிக்க வேண்டும். சந்தேகம் இருந்தால் சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும்.

தமிழகத்தில் இலங்கை அகதிகள் முகாம் இல்லாமல் இருக்க வேண்டும். அவர்கள் சுதந்திரமாக செயல் பட வேண்டும் என்பதே எனது நிலைப்பாடு. உலகம் முழுவதும் தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தப் பட்டு வருகிறது. ஒடிசாவில் காவல் துறையில் உயர் பதவியில் இருந்த தமிழர் மீது தாக்குதல் நடத்தப் பட்டு அவர் உயிரிழந்துள்ளார். இந்த தாக்குதலை பாரதீய ஜனதா தான் செய்துள்ளது. இதை மத்திய மந்திரி தர்மேந்திரபிரதான் நியாயப்படுத்தி உள்ளார்.

மலேசியா நாட்டின் பினாங்கு மாநில துணை முதல்வர் ராமசாமி 5 ஆண்டுகள் இந்தியாவுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டு இருந்தது. அதை உடைத்து ராமசாமி இந்தியா வர நடவடிக்கை எடுத்தது நான் தான்.

இவ்வாறு வைகோ கூறினார்.

வைகோவுடன், மலேசியாவின் பினாங்கு மாநில துணை முதல்-மந்திரி ராமசாமியும் கோவை வந்து இருந்தார். அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

எனது சொந்த ஊர் தற்போதைய திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அருகே உள்ள முக்கநாயக்கன் வலசு ஆகும். என்னுடைய பெற்றோர் 1920-ம் ஆண்டே மலேசியா சென்று குடியேறி விட்டனர். நான் பிறந்தது, வளர்ந்தது படித்தது எல்லாம் மலேசியாவில் தான். எனது உறவினர்கள் சொந்த கிராமத்தில் வசித்து வருகிறார்கள். அவர்களை காண ஆவல் ஏற்பட்டது. அதற்காக இங்கு வந்தேன்.

மே-17 இயக்கம் சார்பில் தமிழ்ஈழ விடுதலை கருத்தரங்கில் கலந்து கொண்டேன். தமிழ் ஈழ விடுதலை சாத்தியம் தான். நான் விடுதலைப்புலிகள் ஆதரவாளர் என்பதால் இந்தியா வர 5 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டு இருந்தது. அதை தகர்த்தவர் வைகோ தான். தற்போது வைகோ மலேசியா செல்ல தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. அதை எதிர்த்து சட்ட போராட்டம் நடத்தி வெற்றி பெறுவேன்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story