காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்


காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 19 Feb 2018 10:45 PM GMT (Updated: 19 Feb 2018 7:48 PM GMT)

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி சீர்காழியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சீர்காழி,

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் சீர்காழியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர் செல்லப்பன் தலைமை தாங்கினார். ஒன்றிய துணை செயலாளர் செல்வராஜ், மாவட்டக்குழு உறுப்பினர்கள் வரதராஜன், நீதிசோழன், தேவகி, பிரபாகரன், பாஸ்கரன், ஜெயக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாவட்ட செயலாளர் சீனிவாசன், விவசாய சங்க மாவட்ட தலைவர் வீரராஜ், ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்ட செயலாளர் ராமன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வேண்டும். விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். கடந்த ஆண்டு வழங்க வேண்டிய பயிர்க்காப்பீட்டு தொகையை உடனே வழங்க வேண்டும். பஸ் கட்டணத்தை குறைக்க வேண்டும். வேலையில்லாமல் பாதிக்கப்பட்டு வரும் விவசாய தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும், காவிரி நதிநீர் பங்கீட்டில் தமிழகத்தின் உரிமையை பறிகொடுத்த மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் ராமச்சந்திரன், மருதையன், பாண்டியன், தட்சிணாமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Next Story