ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி: வடமாநிலத்தை சேர்ந்த 3 பேர் கைது


ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி: வடமாநிலத்தை சேர்ந்த 3 பேர் கைது
x
தினத்தந்தி 20 Feb 2018 3:45 AM IST (Updated: 20 Feb 2018 1:18 AM IST)
t-max-icont-min-icon

ராஜாக்கமங்கலம் அருகே ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட வடமாநிலத்தை சேர்ந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

ராஜாக்கமங்கலம்,

ராஜாக்கமங்கலம் அருகே அனந்தநாடார் குடியிருப்பு பகுதியில் ஒரு தனியார் வங்கியின் ஏ.டி.எம். மையம் உள்ளது. இங்கு சம்பவத்தன்று நள்ளிரவில் மர்ம நபர்கள் புகுந்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால், எந்திரத்தில் பணம் வைத்திருந்த பகுதியை உடைக்க முடியாததால் ரூ.6½ லட்சம்  தப்பியது.

இதுபற்றி வங்கி அதிகாரிகள் ராஜாக்கமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். அப்போது, அந்த ஏ.டி.எம். எந்திரத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் கொள்ளையர்களின் உருவங்கள் பதிவாகி இருந்தது தெரிய வந்தது. அந்த காட்சியில், 2 வாலிபர்கள் நள்ளிரவில் 1 மணியளவில் முகத்தை மூடிய நிலையில் ஏ.டி.எம். மையத்துக்குள் நுழைகிறார்கள். அவர்கள் இரும்பு கம்பியால் ஏ.டி.எம். எந்திரத்தை உடைக்கிறார்கள். ஆனால், பணம் இருக்கும் பகுதியை உடைக்க முடியவில்லை. இதனால், அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

இந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். அதில் போலீசாருக்கு துப்பு கிடைத்தது. அதே பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் தங்கியிருந்த வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது. அதன்படி 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் ஒடிசா மாநிலம் போத் மாவட்டத்தை சேர்ந்த அனில் கர்னா (வயது23), ஆகாஷ் (23) என்பதும், ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டதும் தெரிய வந்தது.

ஏ.டி.எம். மையத்திற்குள் அனில் கர்னா, ஆகாஷ் ஆகிய 2 பேரும் உள்ளே நுழைந்த போது, அதே கம்பெனியில் வேலை பார்த்த பிபிஷானா ஜானி (25) என்பவர் ஏ.டி.எம். வெளியே நின்றபடி ஆட்கள் யாரும் வருகிறார்களா? என்றும் நோட்டமிட்டுள்ளார்.

இவர்கள் 3 பேரும் நீண்ட நாட்களாக திட்டமிட்டு, ஏ.டி.எம்.மில் நிரப்பப்பட்டிருந்த பணத்தை கொள்ளையடிக்க காத்திருந்தனர். அதன்படி கைவரிசை காட்டிய போது, பணம் வைக்கப்பட்டிருந்த பகுதியை உடைக்க முடியாததால் அவர்களுடைய திட்டம் நிராசையாகி விட்டது. போலீசாரிடமும் வசமாக மாட்டிக் கொண்டனர். இதையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். ஏ.டி.எம். கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட 3 பேரும், வேறு ஏதேனும் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டனரா? என்றும் போலீசார் அவர்களிடம் துருவி, துருவி விசாரணை நடத்தி வருகிறார்கள்.   


Next Story