கூட்டுக்குடிநீர் திட்டத்திற்கு வதியம் ஊராட்சி பொதுமக்கள் எதிர்ப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு


கூட்டுக்குடிநீர் திட்டத்திற்கு வதியம் ஊராட்சி பொதுமக்கள் எதிர்ப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு
x
தினத்தந்தி 19 Feb 2018 10:45 PM GMT (Updated: 19 Feb 2018 9:10 PM GMT)

தோகைமலை கூட்டுக்குடிநீர் திட்டத்திற்கு வதியம் ஊராட்சி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து நாளை (புதன்கிழமை) சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட போவதாக மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு கொடுத்தனர்.

கரூர்,

கரூர் மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் கோவிந்தராஜ் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். கூட்டத்தில் குளித்தலை அருகே வதியம் ஊராட்சி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் திரண்டு வந்து கொடுத்த மனுவில் கூறியிருந்ததாவது:-

எங்களது ஊராட்சியில் காவிரி ஆற்று படுகையில் ஏற்கனவே மருங்காபுரி கூட்டுக்குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. கடந்த 2016-ம் ஆண்டு மீண்டும் ஒரு திட்டமாக தோகைமலை கூட்டுக்குடிநீர் திட்டம் செயல்படுத்த இருந்ததை எதிர்ப்பு தெரிவித்தோம். அதிகாரிகளிடம் பல முறை மனு கொடுத்தோம். கடந்த 2017-ம் ஆண்டு தொடர் உண்ணாவிரத போராட்டத்தின் அறிவிப்பின் போது நடந்த அமைதி பேச்சுவார்த்தையை ஊர் பொதுமக்கள் புறக்கணித்தோம்.

இந்த நிலையில் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி கடந்த 15-ந் தேதி மீண்டும் தோகைமலை கூட்டுக்குடிநீர் திட்டம் வேலை தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை செயல்படுத்தினால் எங்களது கிராமத்தின் விவசாயமும், வாழ்வாதாரமும் பாதிக்கப்படும். குடிநீர் பஞ்சம் ஏற்படும். எனவே இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை (புதன்கிழமை) சாலை மறியல் போராட்டம் நடத்தி, குடும்ப அட்டை, ஆதார், வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றை அரசிடம் ஒப்படைக்க உள்ளோம். இதற்கு அனுமதிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

மனுவை பெற்ற கலெக்டர் கோவிந்தராஜ் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

இதேபோல கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் மாவட்ட செயலாளர் மூர்த்தி தலைமையில், மாவட்ட பொருளாளர் தங்கவேல் மற்றும் நிர்வாகிகள் திரண்டு வந்து ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில், “நெரூர் காவிரி ஆற்றில் இருந்து ஒத்தக்கடை வரும் குடிநீர் குழாயின் இடைப்பட்ட பகுதியில் சமூக விரோதிகள் சிலர் பிரதான குழாயில் இருந்து தண்ணீரை முறைகேடாக எடுத்து தென்னை மரம் மற்றும் வாழை மரங்களுக்கு குடிநீரை உபயோகப்படுத்துகின்றனர். இதனால் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு போதுமான குடிநீர் வருவதில்லை. எனவே பிரதான குழாயில் இருந்து குடிநீரை திருடும் சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக்கூறியிருந்தனர்.

நாம் தமிழர் கட்சியின் கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் நன்மாறன் தலைமையில் நிர்வாகிகள் கொடுத்த மனுவில், “கரூர் நகராட்சியில் தரைக்கடை, கழிப்பறை, பஸ் நிலைய சுங்க கட்டணம் உள்ளிட்டவற்றை வசூலிக்க இன்று (செவ்வாய்க்கிழமை) பொது ஏலம் விடப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும். முறையான விதிகளை பின்பற்றாததால் ஏலம் நடைபெறக்கூடாது. இல்லையெனில் போராட்டம் நடத்தப்படும்” என தெரிவித்திருந்தனர். கரூர் மாவட்ட ஆதித்தமிழர் பேரவையின் மாவட்ட செயலாளர் முல்லையரசு கொடுத்த மனுவில், “மாவட்டத்தில் அனைத்து துப்புரவு பணியாளர்களுக்கும் அடையாள அட்டை வழங்கிட வேண்டும்” கூறியிருந்தார்.

கரூர் நகராட்சி 44-வது வார்டு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சார்பில் அளிக்கப்பட்ட மனுவில், “கரூரில் இருந்து ஈசநத்தம் செல்லும் சாலையில் பொன்னகர் பகுதியில் இருந்த பயணிகள் நிழற்குடை இடிக்கப்பட்டு விட்டது. புதிய நிழற்குடை கட்டித்தர வேண்டும்” என்று தெரிவித்திருந்தனர். இதேபோல பொதுமக்கள் பலர் கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் கொடுத்தனர். மனுக்களை பெற்ற கலெக்டர் கோவிந்தராஜ் அதனை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். 

Next Story