மாவட்ட செய்திகள்

விந்தியகிரி மலைக்கு புதிய படிக்கட்டுகள், பொது மருத்துவமனை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார் + "||" + Vindhyagiri hill New stairs, general hospital Prime Minister Modi launched

விந்தியகிரி மலைக்கு புதிய படிக்கட்டுகள், பொது மருத்துவமனை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

விந்தியகிரி மலைக்கு புதிய படிக்கட்டுகள், பொது மருத்துவமனை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்
சரவணபெலகோலாவில் 57 உயர பாகுபலி சிலை அமைந்துள்ள விந்தியகிரி மலைக்கு புதிய படிக்கட்டுகளையும், பொதுமருத்துவமனையையும் பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொடங்கி வைத்தார்.
ஹாசன்,

கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டம் சென்னராயப்பட்டணா தாலுகா சரவணபெலகோலாவில் உலகப்புகழ்பெற்ற கோமதேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஒரேகல்லில் செதுக்கப்பட்ட 57 அடி உயர கோமதேஸ்வரர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இந்த கோமதேஸ்வரர், பாகுபலி என்றும் அழைக்கப்படுகிறார்.


12 வருடங்களுக்கு ஒருமுறை இக்கோவிலில் மகா மஸ்தகாபிஷேக விழா நடைபெற்று வருகிறது. அதன்படி கடந்த 7-ந் தேதி இவ்விழாவை, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தொடங்கி வைத்தார்.

மகா மஸ்தகாபிஷேக விழாவில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் புதுடெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் மைசூருவை வந்தடைந்தார்.

நேற்று முன்தினம் மைசூருவிலேயே தங்கிய பிரதமர் நரேந்திர மோடி நேற்று மதியம் 1.30 மணியளவில் மைசூருவில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் சரவணபெலகோலாவில் துணை நகரங்கள் அருகே புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஹெலிபேடில் வந்து இறங்கினார். அங்கு அவருக்கு மாவட்ட பொறுப்பு மந்திரி ஏ.மஞ்சு, மாவட்ட கலெக்டர் ரோகிணி சிந்தூரி உள்பட பலர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

அதையடுத்து பிரதமர் நரேந்திர மோடி காரில் கோமதேஸ்வரர் கோவில் அமைந்திருக்கும், விந்தியகிரி மலைக்கு கீழ்ப்பகுதியில் அமைந்துள்ள சாவுண்டராயா சபா மண்டபத்திற்கு சென்றார். அங்கு அவரை ஜெயின் மத ஆண், பெண் துறவிகள் உள்பட பலரும் வரவேற்றனர். பின்னர் விழா மேடைக்கு சென்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு, மடாதிபதி சாருகீர்த்தி பட்டாரக்க சுவாமி ஏலக்காய் மாலை, சால்வை அணிவித்து, வெள்ளி கலசம் மற்றும் ஜெயின் மத கொடி ஆகியவற்றை கொடுத்து வரவேற்றார்.

மேலும் பாகுபலியின் சிறிய சிலை அடங்கிய ஒரு நினைவுப்பரிசையும் வழங்கினார். அதை பிரதமர் நரேந்திர மோடி பெற்றுக்கொண்டார். அதையடுத்து விந்தியகிரி மலையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 630 படிகளை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். மேலும் சரவணபெலகோலாவில் 50 படுக்கை வசதிகளுடன் புதிதாக மாநில அரசு மற்றும் திகம்பரா ஜெயின் மடம் சார்பில் கட்டப்பட்டுள்ள ஸ்ரீபாகுபலி பொது மருத்துவமனையை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். அதையடுத்து பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:-

12 வருடங்களுக்கு ஒருமுறை நடக்கும் இந்த மாபெரும் மகா மஸ்தகாபிஷேக விழாவில் கலந்து கொள்வதில் நான் பெருமை அடைகிறேன். இந்த தருணம் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியான தருணம் ஆகும். இங்கு வருவதற்கு எனக்கு வாய்ப்பு கிடைக்குமா? கிடைக்காதா? என்று யோசித்துக் கொண்டே இருந்தேன். முடிவில் நான் எதிர்பார்த்ததுபோலவே இங்கு வர எனக்கு வாய்ப்பு கிடைத்தது. மேலும் பகவான் பாகுபலியின் ஆசிர்வாதமும் எனக்கு கிடைத்துள்ளது.

மேலும் இங்குள்ள ஜெயின் மத ஆண், பெண் துறவிகளின் ஆசியும் எனக்கு கிடைத்திருக்கிறது. இதை நான் பெரும் பாக்கியமாக கருதுகிறேன். மத்திய அரசு எவ்வளவோ பிரச்சினைகளில் இருந்தாலும், சரவணபெலகோலாவிற்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்துள்ளது. நான் இப்போது அதை நேரில் பார்க்கிறேன். நான் எதிர்பார்த்ததை விட இங்கு எல்லா வசதிகளும் சிறப்பாக உள்ளன.

இன்று உலகில் எத்தனையோ பேர் நோய்வாய்ப்பட்டு உள்ளனர். சிலர் போதைக்கு அடிமையாகி உள்ளனர். மேலும் பலர் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வருகிறார்கள். ஜெயின் மதத்தை சேர்ந்தவர்கள் நாட்டுப்பற்றுடன் இருந்து வருகிறார்கள். அவர்கள் மக்களின் பொது நலனுக்காக பாடுபட்டு வருகிறார்கள்.

இந்த மகா மஸ்தகாபிஷேகத்திற்கு மட்டுமின்றி, நாடு முழுவதும் பல்வேறு நலத்திட்டங்களையும் ஜெயின் மதத்தைச் சேர்ந்தவர்கள் செய்து வருகிறார்கள். நான் தினமும் காலையில் எழுந்தவுடன் பாகுபலியின் மந்திரத்தை(இந்தியில் பாகுபலியின் மந்திரம் ஒன்றை பாடினார்) பாடி பகவான் பாகுபலியை வணங்குவேன். அதனால்தான் எனக்கு பாகுபலியின் ஆசி கிடைத்து வருகிறது.

இந்திய சமுதாயத்தின் பலம் கால மாற்றத்துக்கு ஏற்ப தங்களை மாற்றிக்கொள்ளும் ஆற்றலில் இருக்கிறது. நமது நாட்டில் சமுதாய பிரச்சினைகளைவிட மதமாச்சர்யங்கள் அதிகம் இருப்பதாக பலர் நினைக்கிறார்கள். அது தவறான கருத்து. நமது சமுதாயத்தை தீய சக்திகள் ஆட்கொள்ளும்போது துறவிகளும், மடாதிபதிகளும் நாட்டு மக்களை மதநம்பிக்கைகள் மூலம் நல்வழிப்படுத்துகிறார்கள்.

நாட்டில் ஏழை, எளிய மக்களுக்காக மத்திய அரசு சார்பில் மருத்துவ காப்பீட்டுத் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் மக்கள் அனைவரும் நோயிலிருந்து விடுபட்டு நலமுடன் வாழ வேண்டும் என்று விரும்புகிறேன். உலகிலேயே இப்படியொரு மருத்துவ காப்பீட்டுத் திட்டம் இந்தியாவின் மட்டும்தான் உள்ளது.

இங்கு ஆன்மிகத்தை மட்டும் போதிக்காமல் கல்வி, மருத்துவம் உள்பட பல்வேறு துறைகளிலும் சேவை ஆற்றி வரும் ஜெயின் மத மடங்களையும், அந்த மதத்தைச் சார்ந்தவர்களையும் நான் பாராட்டுகிறேன். இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

இதையடுத்து அவர் அங்கு குவிந்திருந்த பக்தர்கள், பா.ஜனதா தொண்டர்கள் ஆகியோரைப் பார்த்து கையசைத்தார். மேலும் மேடையோரம் வீற்றிருந்த ஜெயின் மத ஆண், பெண் துறவிகளையும் பார்த்து பிரதமர் மோடி வணங்கினார். அப்போது ஜெயின் மத ஆண் துறவிகள், பிரதமர் மோடிக்கு புத்தகம் ஒன்றை பரிசாக வழங்கினார். அதை அவர் பெற்றுக்கொண்டு அவர்களிடம் சில நிமிடங்கள் கலந்துரையாடினார். பின்னர் அவர் மேடையில் இருந்து மதியம் 2.50 மணியளவில் புறப்பட்டு சென்றார். முன்னதாக விழாவில் மடாதிபதி சாருகீர்த்தி பட்டாரக்க சுவாமி பேசும்போது கூறியதாவது:-

இந்த மகா மஸ்தகாபிஷேக விழாவில் முன்னாள் பிரதமர்கள் நேரு, இந்திரா காந்தி, நரசிம்மராவ் ஆகியோர் வந்துள்ளனர். அதன்பிறகு இந்த விழாவுக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடிதான். அவர் வந்ததால் இந்த விழாவுக்கு மேலும் பெருமை கிடைத்துள்ளது. மேலும் இங்கு இதற்கு முன்பு குழந்தைகள் ஆஸ்பத்திரி ஒன்று கட்டப்பட்டது. அதை அப்போதைய குடியரசுத்தலைவர் அப்துல் கலாம் திறந்து வைத்தார். தற்போது கட்டப்பட்டுள்ள இந்த பொது மருத்துவமனையை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது.

இந்த மருத்துவமனையில் அனைவருக்கும் இலவசமாக சிகிச்சை அளிக்கப்படும் என்பதை இந்த தருணத்தில் தெரிவித்துக் கொள்கிறேன். பாகுபலியின் சக்தி நரேந்திர மோடிக்கு கிடைத்துள்ளது. பாகுபலிக்கு எப்படி அவருடைய அன்னையின் ஆசி கிடைத்ததோ, அதேபோல் பிரதமர் நரேந்திர மோடிக்கும் அவருடைய அன்னையின் ஆசியும், பாகுபலியின் ஆசியும் கிடைத்து வருகிறது.

விழாவில் கவர்னர் வஜூபாய் வாலா, மத்திய மந்திரிகள் அனந்தகுமார், சதானந்தகவுடா உள்பட பலர் கலந்து கொண்டனர். பிரதமர் மோடி ஹெலிகாப்டரில் சென்று பாகுபலியை தரிசிக்கும் திட்டம் கைவிடப்பட்டது

பிரதமர் நரேந்திர மோடி சரவணபெலகோலாவுக்கு ஹெலிகாப்டரில் வருவார் என்றும், பின்னர் ஹெலிகாப்டரில் இருந்தபடி கோமதேஸ்வரர் சிலைக்கு மலர்கள் தூவி வழிபடுவார் என்றும் கூறப்பட்டது. அதற்காக திட்டமும் வகுக்கப்பட்டது. ஆனால் கோமதேஸ்வரர் கோவிலில் மகா மஸ்தகாபிஷேக விழாவையொட்டி பக்தர்களின் வசதிக்காக 5 ஆயிரம் பேர் அமர்ந்து அபிஷேகங்களை பார்க்கக்கூடிய அளவில் ஜெர்மன் தொழில்நுட்பத்தில் பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது. ஹெலிகாப்டர் அந்த பகுதியில் வந்தால், ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படும் என்று கருதி கடைசி நேரத்தில் பிரதமர் மோடி ஹெலிகாப்டரில் சென்று பாகுபலியின் சிலைக்கு மலர்கள் தூவும் திட்டம் கைவிடப்பட்டது.

இதையடுத்து பிரதமர் மோடி படிகள் வழியாக விந்தியகிரி மலை மீது ஏறி பாகுபலிக்கு அபிஷேகம் செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் சாவுண்டராயா சபா மண்டபத்தில் இருந்தபடியே பகவான் பாகுபலியை தரிசித்துவிட்டு சென்று விட்டார்.