வங்கி கடன் மோசடியில் நிரவ் மோடிக்கு உடந்தை: 3 வங்கி அதிகாரிகளுக்கு சி.பி.ஐ. காவல்


வங்கி கடன் மோசடியில் நிரவ் மோடிக்கு உடந்தை: 3 வங்கி அதிகாரிகளுக்கு சி.பி.ஐ. காவல்
x
தினத்தந்தி 20 Feb 2018 9:32 PM GMT (Updated: 20 Feb 2018 9:32 PM GMT)

வங்கி கடன் மோசடியில் நிரவ் மோடிக்கு உடந்தையாக இருந்ததாக கைதான 3 வங்கி அதிகாரிகளை அடுத்த மாதம் 3-ந்தேதி வரை சி.பி.ஐ. காவலில் வைத்து விசாரிக்க கோர்ட்டு உத்தரவிட்டது.

மும்பை,

மும்பையை சேர்ந்த பிரபல வைர வியாபாரி நிரவ் மோடி, மும்பை பிராடி ரோட்டில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி கிளையில் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் ரூ.11 ஆயிரத்து 700 கோடி கடன் வாங்கி மோசடி செய்தது சமீபத்தில் அம்பலமானது. இதையடுத்து அவர் குடும்பத்துடன் வெளிநாடு தப்பிச்சென்றார்.

மேலும் இந்த மோசடியில் தொடர்புடைய அவரது வர்த்தக பங்காளியும், கீதாஞ்சலி குழும தலைவருமான மெகுல் சோக்‌ஷியும் வெளிநாட்டுக்கு தப்பிஓடிவிட்டார். இதுகுறித்து சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

இந்தநிலையில் நிரவ் மோடியின் ரூ.11,384 கோடி வங்கி கடன் மோசடியில் அவருக்கு உடந்தையாக இருந்ததாக பிராடி வங்கி கிளை அதிகாரிகளான அன்னிய செலாவணி பிரிவை சேர்ந்த தலைமை மேலாளர் பெச்சு திவாரி, அதே பிரிவை சேர்ந்த மற்றொரு மேலாளர் யஷ்வந்த் ஜோஷி, ஏற்றுமதி துறையை சேர்ந்த அதிகாரி பிரபுல் சவாந்த் ஆகிய 3 பேரை சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்தனர்.

இதைத்தொடர்ந்து கைதான 3 பேரும் நேற்று சி.பி.ஐ. சிறப்பு கோட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். கோர்ட்டு அவர்கள் 3 பேரையும் அடுத்த மாதம்(மார்ச்) 3-ந்தேதி வரை சி.பி.ஐ. போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க உத்தரவிட்டது.

Next Story