தண்ணீர் உறிஞ்சப்படுவதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்


தண்ணீர் உறிஞ்சப்படுவதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 20 Feb 2018 10:15 PM GMT (Updated: 20 Feb 2018 10:08 PM GMT)

ஓமலூர் அருகே குடிநீர் குழாயில் மோட்டார் மூலம் தண்ணீர் உறிஞ்சப்படுவதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

ஓமலூர்,

ஓமலூர் அருகே பொம்மியம்பட்டி இந்திரா நகர் காலனி பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு அங்கு கட்டப்பட்டுள்ள மேல்நிலைத்தொட்டியில் இருந்து தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக அந்த தொட்டியில் தண்ணீர் ஏறுவது இல்லை. இதனால் அங்குள்ள மக்கள் போதிய குடிநீர் கிடைக்காமல் அவதிப்பட்டு வந்தனர்.

குழாயில் குடிநீர் வரும் போது அதனை பலர் மோட்டார் மூலம் உறிஞ்சி எடுப்பதால், மேல்நிலைத்தொட்டியில் தண்ணீர் ஏறுவது இல்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகிறார்கள். எனவே மோட்டார் மூலம் குடிநீர் உறிஞ்சப்படுவதை தடுத்து, தண்ணீர் பிரச்சினையை தீர்க்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் குடிநீர் குழாயில் இருந்து மோட்டார் மூலம் தண்ணீர் உறிஞ்சப்படுவதை தடுக்க வலியுறுத்தி, பொம்மியம்பட்டி பஸ் நிறுத்தம் அருகே நேற்று காலை 8 மணிக்கு பொதுமக்கள் திடீரென்று சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது பற்றி தகவல் அறிந்ததும் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பெரியசாமி மற்றும் போலீசார் விரைந்து சென்று மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

அப்போது பொதுமக்கள் மோட்டார் வைத்து தண்ணீர் உறிஞ்சப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்கள். அதற்கு போலீசார், சாலை மறியலை கைவிடுங்கள், அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். இதைத்தொடர்ந்து பொதுமக்கள் வாகனங்கள் செல்லும் வகையில் வழியை விட்டு, சாலையோரம் நின்று இருந்தனர்.

மேலும் இது குறித்து காடையாம்பட்டி ஊராட்சி ஒன்றிய ஆணையாளருக்கு போலீசார் தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் ஆணையாளர் சொக்கலிங்கம் மற்றும் அதிகாரிகள் அங்கு வந்து மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் ஒன்றிய அதிகாரிகள் அந்த பகுதியில் அதிரடியாக சோதனை நடத்தினார்கள். சோதனையின் போது குழாயில் இருந்து தண்ணீர் உறிஞ்ச பயன்படுத்தப்பட்ட 4 மோட்டார்களை பறிமுதல் செய்தனர்.

அதிகாரிகள் சோதனை செய்வதை அறிந்த சிலர் மோட்டார்களை எடுத்து வைத்து விட்டனர். ஆனால் அதிகாரிகள் அவர்களுக்கான குடிநீர் குழாய் இணைப்பை துண்டித்தனர். இதைத்தொடர்ந்து சாலையோரம் கூடியிருந்த பொதுமக்கள் காலை 11 மணியளவில் கலைந்து சென்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story