மாணவர்கள் சிறந்த சமூகத்தை உருவாக்க வேண்டும் மாவட்ட நீதிபதி பேச்சு


மாணவர்கள் சிறந்த சமூகத்தை உருவாக்க வேண்டும் மாவட்ட நீதிபதி பேச்சு
x
தினத்தந்தி 21 Feb 2018 5:34 AM IST (Updated: 21 Feb 2018 5:34 AM IST)
t-max-icont-min-icon

பள்ளியில் படிக்கும் மாணவர்கள் சிறந்த சமூகத்தை உருவாக்க வேண்டும் என்று மாவட்ட முதன்மை நீதிபதி மகிழேந்தி கூறினார்.

போளூர்,

திருவண்ணாமலை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் போளூர் வட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு ஆகியவை இணைந்து போளூர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடத்தினர். திருவண்ணாமலை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவரும், மாவட்ட முதன்மை நீதிபதியுமான ஜி.மகிழேந்தி தலைமை தாங்கினார். மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளரும், சார்பு நீதிபதியுமான ராஜ்மோகன், போளூர் வட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவர் நீதிபதி ஜெகன்நாதன், நீதித்துறை நடுவர் தாமோதரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். போளூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பாக்கியவதி வரவேற்றார்.

முகாமில் நீதிபதி மகிழேந்தி பேசியதாவது:-

அரசு பள்ளியில் படிக்கும் மாணவிகள் தங்களை தாழ்மையாக எண்ணாமல் நமது குடும்பத்தின் குழ்நிலையை கருத்தில் கொண்டு தங்களது பொறுப்பை உணர்ந்து படிக்க வேண்டும். நானும் ஏழை குடும்பத்தை சேர்ந்தவன் தான். படிக்கும் காலத்தில் சத்துணவை சாப்பிட்டு தான் பள்ளி படிப்பை தொடர்ந்தேன். அரசு சட்டக் கல்லூரியில் படித்து நீதிபதியாக பணியாற்றி வருகிறேன்.

பள்ளியில் படிக்கும் மாணவர்கள் சிறந்த சமூகத்தை உருவாக்க வேண்டும். சாதி, மொழி ரீதியிலான அமைப்புகளில் மாணவர்கள் ஈடுபடுவது அவரவர் விருப்பம். ஆனால் மாணவ-மாணவிகளாகிய உங்களுக்கு இது தேவைதானா என்பதை புரிந்து செயல்பட வேண்டும்.

மாணவ-மாணவிகள் தங்களுக்குள் கட்டுப்பாடுகளை வளர்த்து கொள்ள வேண்டும். எண்ணங்கள் உயர்வானதாக இருந்தால், வாழ்க்கை உயர்வடையும். பள்ளியை விட்டு வெளியில் செல்லும்போது பிறர் பின் தொடர்வது, தொல்லை கொடுப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டால் தலைமை ஆசிரியரிடமோ, பெற்றோர்களிடமோ அல்லது போலீசாரிடமோ தெரிவிக்க வேண்டும். தெரியாதவர்கள் யாராவது நம்மை தொட்டு பேசுவதற்கு அனுமதிக்கக் கூடாது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story