வானத்தில் இருந்து விழுந்து நொறுங்கிய மர்ம பொருள்
தொரேஅகலா கிராமத்தில் வானத்தில் இருந்து விழுந்து நொறுங்கிய மர்ம பொருளை இந்திய ராணுவ ஆராய்ச்சி நிறுவன அதிகாரிகள் கைப்பற்றினர்.
சிக்கமகளூரு,
சித்ரதுர்கா மாவட்டம் செல்லக்கெரே பகுதியில் மத்திய அரசுக்கு சொந்தமான இந்திய ராணுவ ஆராய்ச்சி நிறுவனம் அமைந்துள்ளது. இந்த நிறுவனத்தில் இருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது தொரேஅகலா கிராமம். நேற்று காலையில் இந்த கிராமத்தைச் சேர்ந்த சாரதம்மா என்பவருடைய விவசாய தோட்டத்தில், வானத்தில் இருந்து திடீரென ஒரு மர்ம பொருள் வந்து விழுந்தது. விழுந்ததும் அது நொறுங்கியது. அது சுமார் 20 கிலோ எடையுடன், பார்ப்பதற்கு மின்சாதனம் போல் இருந்தது.
அதைப்பார்த்த கிராம மக்கள் பீதியும், பதற்றமும் அடைந்தனர். இதுகுறித்து அவர்கள் உடனே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் மூலம் தகவலை அறிந்த இந்திய ராணுவ ஆராய்ச்சி நிறுவன அதிகாரிகள் சரவணன் மற்றும் சிவசுப்பிரமணியன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் அந்த மர்ம பொருளை கைப்பற்றி ஆய்வுக்காக எடுத்துச்சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.