ரூ.48 லட்சம் தங்கம் பறிமுதல் 2 பேர் கைது


ரூ.48 லட்சம் தங்கம் பறிமுதல் 2 பேர் கைது
x
தினத்தந்தி 22 Feb 2018 10:15 PM GMT (Updated: 22 Feb 2018 9:09 PM GMT)

மதுரை விமான நிலையத்தில் ரூ.48 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

மதுரை,

இலங்கையில் இருந்து மதுரை வரும் விமானத்தில் தங்கம் கடத்தி வருவதாக சுங்க புலனாய்வுத் துறையினருக்கு தகவல் வந்தது. இதைத் தொடர்ந்து மதுரை விமான நிலையத்தில் அந்த விமானத்தில் வந்த பயணிகளை சுங்க புலனாய்வுத்துறை உதவி கமிஷனர் வெங்கடேஷ்பாபு தலைமையில் அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அப்போது சென்னையை சேர்ந்த இம்ரான்கான்(வயது 21) என்ற பயணி கொண்டு வந்த பொருட்களை சோதனை மேற்கொண்டனர். அப்போது அவர் ‘மைக்ரோவேவ் ஓவனில்’ உள்ளே வைத்து 834 கிராம் தங்கத்தை கடத்தி வந்தது தெரியவந்தது. அதன் மதிப்பு ரூ.25 லட்சம் ஆகும்.

அதேபோன்று துபாயில் இருந்து மதுரை வந்த விமானத்தில் வந்த பயணிகளை சுங்க புலனாய்வுத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் திருச்சியை சேர்ந்த அபுபக்கர் சித்திக்(25) என்ற பயணி ஹோம் தியேட்டர் உள்ளே மறைத்து வைத்து 750 கிராம் தங்கத்தை கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மதிப்பு ரூ.23 லட்சம் ஆகும்.

சுங்க புலனாய்வுத்துறை அதிகாரிகள் தங்கத்தை பறிமுதல் செய்து கடத்தி வந்த 2 பேரையும் கைது செய்தனர். ஒரே நாளில் மதுரை விமான நிலையத்தில் ரூ.48 லட்சம் மதிப்பிலான தங்கம் பிடிபட்டது குறிப்பிடத்தக்கது.

Next Story