காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை ராகுல் காந்தி வெளியிடுகிறார்


காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை ராகுல் காந்தி வெளியிடுகிறார்
x

பெங்களூருவில் மார்ச் 15–ந் தேதிக்குள் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை ராகுல் காந்தி வெளியிடுவதாக வீரப்பமொய்லி எம்.பி. கூறினார்.

பெங்களூரு,

கர்நாடக காங்கிரஸ் தேர்தல் அறிக்கை குழு தலைவர் வீரப்பமொய்லி எம்.பி. பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

கடந்த சட்டசபை தேர்தலின்போது காங்கிரஸ் கொடுத்த 165 வாக்குறுதிகளில் 157 வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளோம். மேலும் சொல்லாத பல திட்டங்களையும் எங்கள் அரசு செயல்படுத்தியுள்ளது. ஊழல் இல்லாத நல்லாட்சியை சித்தராமையா கர்நாடக மக்களுக்கு வழங்கி இருக்கிறார். பசி போக்கப்பட்டுள்ளது. குடிசைகள் நீக்கப்பட்டு ஏழை மக்களுக்கு காங்கிரீட் வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டுள்ளன. சட்டம்–ஒழுங்கு சரியான முறையில் பராமரிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் வருகிற சட்டசபை தேர்தலுக்கான தேர்தல் அறிக்கை தயாரிப்பது தொடர்பாக மாநிலம் முழுவதும் நாங்கள் சுற்றுப்பயணம் செய்து மக்களின் கருத்துகளை கேட்டு அறிந்தோம். பொதுமக்கள், வணிகர்கள், மென்பொருள் பொறியாளர்கள், தொழில் அதிபர்கள், கல்வியாளர்கள், நகர திட்டமிடல் நிபுணர்கள் என அனைத்து தரப்பினரின் ஆலோசனைகளையும் கேட்டு பெற்றோம். அதன் அடிப்படையில் தேர்தல் அறிக்கையை தயாரித்து உள்ளோம். இது கர்நாடகத்தை மேலும் முன்னேற்றுவதாக இருக்கும்.

மாவட்டம் மற்றும் மண்டலம் வாரியாக உள்ளூர் பிரச்சினைகளை தீர்க்கும் வகையில் நாங்கள் தனித்தனியாக தேர்தல் அறிக்கையை தயாரித்து உள்ளோம். மாநில அளவிலான தேர்தல் அறிக்கை மார்ச் 10–ந் தேதியில் இருந்து 15–ந் தேதிக்குள் வெளியிடுவோம். பெங்களூருவில் நடைபெறும் கட்சி பொதுக்கூட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தேர்தல் அறிக்கையை வெளியிடுகிறார்.

அதே நாளில் அனைத்து மண்டலங்களிலும் அதற்காக தயாரிக்கப்பட்ட தேர்தல் அறிக்கை வெளியிடப்படும். தேர்தல் அறிக்கை வெளியான பிறகு அதை மக்களிடம் கொண்டு செல்லும் பணியை நாங்கள் தீவிரமாக மேற்கொள்ள முடிவு செய்துள்ளோம்.

கருத்தரங்குகள், கலந்துரையாடல்கள், பொதுக்கூட்டங்கள் மூலம் தேர்தல் அறிக்கையில் இடம் பெறும் அம்சங்களை மக்களுக்கு தெரிவிப்போம். கடந்த 5 ஆண்டுகளில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் மற்றும் அதனால் மக்கள் அடைந்த பயன்கள் குறித்து தொகுதி வாரியாக அறிக்கை தயாரித்து வெளியிடப்படும். இது தொடர்பாக தகவல்களை சேகரிக்க துணை குழு ஒன்றை நாங்கள் அமைத்துள்ளோம். கர்நாடகத்தில் மீண்டும் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும்.

இவ்வாறு வீரப்பமொய்லி கூறினார்.


Next Story