திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி மாற்றுத்திறனாளி பெண்ணிடம் ரூ.1½ லட்சம் மோசடி


திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி மாற்றுத்திறனாளி பெண்ணிடம் ரூ.1½ லட்சம் மோசடி
x
தினத்தந்தி 24 Feb 2018 10:15 PM GMT (Updated: 24 Feb 2018 6:03 PM GMT)

திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி, மாற்றுத்திறனாளி பெண்ணிடம் ரூ.1½ லட்சம் மோசடி செய்த தொழிலாளி மற்றும் அவருடைய மனைவி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஆரல்வாய்மொழி,

ஆரல்வாய்மொழி பகுதியை சேர்ந்த 32 வயதுடைய மாற்றுத்திறனாளி பெண், பூ கட்டும் தொழில் செய்து வருகிறார். இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. இவரது தம்பியின் நண்பர் வில்லவிளையை சேர்ந்த ஹரிச்சந்திரன். தொழிலாளி. இவருக்கு திருமணமாகி பொன்மணி என்ற மனைவி உள்ளார்.

நண்பர்கள் என்ற அடிப்படையில் மாற்றுத்திறனாளியின் தம்பியை பார்க்க ஹரிசந்திரன் அடிக்கடி அவர்களது வீட்டுக்கு செல்வார். இதில் ஹரிச்சந்திரனுக்கும், மாற்றுத்திறனாளி பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்துள்ளனர். அப்போது, ஹரிச்சந்திரன் அந்த பெண்ணை திருமணம் செய்வதாக கூறி, பல முறை உல்லாசமாக இருந்துள்ளார்.

மேலும், அவரிடம் இருந்து நகை, பணம் என ரூ.1½ லட்சம் வரை கடன் வாங்கியுள்ளார். இதற்கு, ஹரிச்சந்திரனின் மனைவி பொன்மணியும் உடந்தையாக இருந்துள்ளார். இதற்கிடையே தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு ஹரிச்சந்திரனிடம் அந்த பெண் வற்புறுத்தினார். ஆனால், அவர் மறுப்பு தெரிவித்ததுடன் அந்த பெண்ணை சந்திப்பதை தவிர்த்து வந்தார். அத்துடன் கடன் வாங்கிய பணம், நகையை திரும்ப கொடுக்கவில்லை.

தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த மாற்றுத்திறனாளி பெண், ஆரல்வாய்மொழி போலீஸ் நிலையத்திலும், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திலும் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் ஹரிச்சந்திரன் மற்றும் மனைவி பொன்மணி மீது ஆரல்வாய்மொழி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story