சொத்தை பிரித்துதரக்கோரி செல்போன் கோபுரத்தில் ஏறி வாலிபர் போராட்டம்
![சொத்தை பிரித்துதரக்கோரி செல்போன் கோபுரத்தில் ஏறி வாலிபர் போராட்டம் சொத்தை பிரித்துதரக்கோரி செல்போன் கோபுரத்தில் ஏறி வாலிபர் போராட்டம்](https://img.dailythanthi.com/Articles/2018/Feb/201802250059420420_The-young-men-got-into-a-fight-with-the-cell-phone-tower_SECVPF.gif)
விருதுநகர் அருகே ஆர்.ஆர்.நகரில் தந்தை தனக்கு சொத்தை பிரித்துதரக்கோரி வாலிபர் ஒருவர் செல்போன் கோபுரத்தில் ஏறி மிரட்டல் விடுத்து போராட்டம் நடத்தினார்.
விருதுநகர்
விருதுநகர் அருகே உள்ள ஆர்.ஆர்.நகரில் பலசரக்கு கடை நடத்தி வருபவர் மாரியப்பன். இவரது மகன் ஜெயபாண்டி (வயது 30). இவர் தனது தந்தை மாரியப்பனிடம் தனக்கு சொத்தை பிரித்து தருமாறு வலியுறுத்தி வந்தார். நேற்று முன்தினம் குடிபோதையில் கடைக்கு வந்து ஜெயபாண்டி தகராறு செய்தார். இது பற்றி மாரியப்பன் வச்சக்காரப்பட்டி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் ஜெயபாண்டியை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து எச்சரித்து அனுப்பினர்.
இந்தநிலையில் நேற்று காலை ஜெயபாண்டி ஆர்.ஆர்.நகரில் சிமெண்டு ஆலை அருகில் உள்ள ஒரு தனியார் செல்போன் கோபுரத்தில் ஏறி தந்தை எனக்கு சொத்தை பிரித்து தராவிட்டால் கீழே குதித்து தற்கொலை செய்து கொள்ளப்போவதாக மிரட்டல் விடுத்தார். தகவல் அறிந்த வச்சக்காரப்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து செல்போன் கோபுரத்தில் நின்று கொண்டு போராட்டம் நடத்திய வாலிபர் ஜெயபாண்டியிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.
இதனை அடுத்து ஜெயபாண்டி நீண்ட இழுபறிக்கு பின்னர் செல்போன் கோபுரத்தில் இருந்து கீழே இறங்கினார். போலீசார் அவரை விசாரணைக்காக போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். இச்சம்பவத்தால் ஆர்.ஆர்.நகர் பகுதியில் 2 மணி நேரத்துக்கு மேல் பரபரப்பு நிலவியது.