பெருந்துறை அருகே மூதாட்டியை கொடூரமாக கொலை செய்த தொழில் அதிபர் கைது


பெருந்துறை அருகே மூதாட்டியை கொடூரமாக கொலை செய்த தொழில் அதிபர் கைது
x
தினத்தந்தி 24 Feb 2018 10:00 PM GMT (Updated: 24 Feb 2018 8:04 PM GMT)

பெருந்துறை அருகே மூதாட்டியை கொடூரமாக கொலை செய்த தொழில் அதிபரை போலீசார் கைது செய்தனர்.

பெருந்துறை,

பெருந்துறை அருகே உள்ள திங்களூர் சக்கிலிகுட்டபாளையத்தை சேர்ந்த கருப்பணன். அவருடைய மனைவி கருப்பாயம்மாள் (75).

கடந்த மாதம் 16-ந்தேதி கருப்பாயம்மாள் அந்த பகுதியில் உள்ள ஒரு தென்னந்தோப்பில் கால்கள் கட்டப்பட்டு, வாயில் தென்னை மட்டை சொருகப்பட்ட நிலையில் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

இதுபற்றி தகவல் கிடைத்ததும் திங்களூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். வயதான மூதாட்டியை இவ்வளவு கொடூரமாக தாக்கி கொன்றவர் யார்? என்று போலீசார் வழக்கு பதிவு செய்து கொலையாளியை தீவிரமாக தேடி வந்தார்கள்.

கொலை நடந்து ஒரு மாதம் கடந்துவிட்ட நிலையில் கொலையாளி சிக்கவில்லை. இந்தநிலையில் கருப்பாயம்மாளுக்கு யாரிடமாவது தகராறு இருந்ததா? என்று போலீசார் விசாரணையை முடுக்கிவிட்டார்கள்.

அப்போது அவரது வீட்டுக்கு அருகில் உள்ள ஆயத்த ஆடை தயாரிக்கும் நிறுவன அதிபர் பெரியசாமி (40) என்பவருக்கும், கருப்பாயம்மாளுக்கும் இடையே, பொதுப் பாதையில் பெரியசாமி கழிப்பறை கட்டியது தொடர்பாக தகராறு இருந்து வந்தது தெரிய வந்தது. இந்த பிரச்சினையால் அந்த கழிப்பிடத்தை ஊராட்சி நிர்வாகம் இடித்து அப்புறப்படுத்திவிட்டதும் தெரிந்தது.

இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் பெரியசாமியை பிடித்து தீவிரமாக விசாரித்தார்கள். அப்போது கருப்பாயம்மாளை பெரியசாமி கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார். தான் கட்டிய கழிப்பறை இடிக்கப்பட்டதால் பெரியசாமி கருப்பாயம்மாள் மீது ஆத்திரத்தில் இருந்துள்ளார். சம்பவத்தன்று கருப்பாயம்மாள் தென்னந்தோப்பு வழியாக நடந்து சென்றிருக்கிறார். அப்போது அங்கு யாரும் இல்லாததால் பின்தொடர்ந்து சென்ற பெரியசாமி கருப்பாயம்மாளின் கால்களை கட்டி அவரை கட்டையால் தாக்கி கொன்றுள்ளார். அவர் கத்த கூடாது என்பவதற்காக வாயில் தென்னை மட்டையை சொருகியதும் தெரியவந்தது. அதைத்தொடர்ந்து பெரியசாமியை கைது செய்த போலீசார் அவரை பெருந்துறை முதல் வகுப்பு மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர் படுத்தினர். மாஜிஸ்திரேட் ரெகைனா பர்வீன் பெரியசாமியை 15 நாள் காவலில் வைக்க உத்தரவு பிறப்பித்தார். இதையடுத்து பெரியசாமி கோபி கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.

Next Story