நேரடி கொள்முதல் நிலையங்களில் சாக்கு பற்றாக்குறையால் நெல் கொள்முதல் பணி பாதிப்பு


நேரடி கொள்முதல் நிலையங்களில் சாக்கு பற்றாக்குறையால் நெல் கொள்முதல் பணி பாதிப்பு
x
தினத்தந்தி 25 Feb 2018 4:15 AM IST (Updated: 25 Feb 2018 2:57 AM IST)
t-max-icont-min-icon

தகட்டூர் பகுதியில் உள்ள நேரடி கொள்முதல் நிலையங்களில் சாக்கு பற்றாக்குறையால் நெல் கொள்முதல் செய்யும் பணி பாதிக்கப்பட்டது. இதனால் விவசாயிகள், சாலையோரங்களில் நெல் மூட்டைகளை அடுக்கி வைத்துள்ளனர்.

வாய்மேடு,

மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரையும், வடகிழக்கு பருவமழையையும் நம்பி நாகை மாவட்டத்தில் உள்ள விவசாயிகள், குறுவை, சம்பா, தாளடி சாகுபடி பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளாக மேட்டூர் அணையில் இருந்து உரிய தண்ணீர் கிடைக்காததாலும், பருவமழையும் சரிவர பெய்யாததாலும் விவசாயம் வெகுவாக பாதிக்கப்பட்டு வருகிறது. அதேபோல் இந்த ஆண்டு குறுவை சாகுபடி பொய்த்து போன நிலையில், சம்பா சாகுபடி பணிகளை விவசாயிகள் மேற்கொண்டனர். ஆனால் பயிர் முளைத்து வந்த நிலையில் கன மழை பெய்ததால் பயிர்கள் பாதிக்கப்பட்டன. இதனால் சம்பா சாகுபடியில் மட்டும் விவசாயிகள் 3 முறை நடவு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் விவசாயிகள் பயிர்களை காப்பாற்றி வந்தனர். தற்போது பயிர்கள் கதிர்கள் விட்டு வரும் நிலையில் தண்ணீர் இல்லாததால் பயிர்கள் காய தொடங்கியது. இதனால் நெல் பெரும்பாலும் பதர்களாகவே மாறிவிட்டது. இருப்பினும் தற்போது விவசாயிகள் மிஞ்சிய பயிர்களை அறுவடை செய்து அரசின் நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்து வருகின்றனர்.

சாக்கு பற்றாக்குறை

நாகை மாவட்டத்தில் மொத்தம் 213 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் இயங்கி வருகின்றன. இந்த நேரடி கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் தங்களது வயல்களில் விளைந்த நெல்லை விற்பனை செய்து வருகின்றனர். விவசாயிகள் கொண்டு வரும் நெல்லை கொள்முதல் செய்து, அரசு வழங்கியுள்ள 40 கிலோ கொள்ளளவு கொண்ட சாக்குகளில் மூட்டை கட்டப்படுகிறது. ஆனால் தற்போது தகட்டூர் உள்ளிட்ட நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் சாக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் நேரடி கொள்முதல் நிலையங்களில் கடந்த 3 நாட்களுக்கு மேலாக நெல் கொள்முதல் பணி பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக விவசாயிகள், தங்களது நெல்லை விற்பனை செய்ய முடியாமல் நேரடி நெல் கொள்முதல் நிலைய வளாகங்களிலும், சாலை ஓரங்களிலும் நெல் மூட்டைகளை அடுக்கி வைத்துள்ளனர்.

2 ஆயிரம் மூட்டைகள் தேக்கம்

பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் அறுவடை செய்த நெல்லை சாக்கு பற்றாக்குறையால் கொள்முதல் செய்யும் பணி பாதிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் மிகுந்த கவலை அடைந்துள்ளனர். கொள்முதல் செய்யாததால் சுமார் 2 ஆயிரம் மூட்டைகளுக்கு மேல் தேங்கி கிடப்பதாக தெரிவித்துள்ள விவசாயிகள், இதுகுறித்து தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுத்து அனைத்து நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கும் தேவையான சாக்குகளை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். 

Next Story