முதல்-அமைச்சர் கோப்பைக்கான மாநில கபடி போட்டி கரூரில் தொடங்கியது


முதல்-அமைச்சர் கோப்பைக்கான மாநில கபடி போட்டி கரூரில் தொடங்கியது
x
தினத்தந்தி 25 Feb 2018 4:15 AM IST (Updated: 25 Feb 2018 2:58 AM IST)
t-max-icont-min-icon

முதல்-அமைச்சர் கோப்பைக்கான மாநில அளவிலான கபடி போட்டி கரூரில் நேற்று தொடங்கியது. ஆண்கள் பிரிவில் முதல் ஆட்டத்தில் பெரம்பலூர் அணி வெற்றி பெற்றது.

கரூர்,

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் முதல்-அமைச்சர் கோப்பைக்கான மாநில அளவிலான கபடி போட்டி கரூரில் திருவள்ளுவர் மைதானத்தில் நேற்று மாலை 6.30 மணிக்கு தொடங்கியது. போட்டியில் மாநிலம் முழுவதும் 32 மாவட்டங்களில் இருந்து ஆண்கள், பெண்கள் அணி பங்கேற்றுள்ளது. போட்டிகள் 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு நாக் அவுட் முறையில் நடக்கிறது. பெண்கள் பிரிவுக்கான முதல் ஆட்டத்தில் நாமக்கல் அணியும், திருவள்ளூர் அணியும் மோதின. இதில் நாமக்கல் அணி, திருவள்ளூர் அணியை 40-க்கு 13 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது. இதேபோல மற்றொரு போட்டியில் தஞ்சாவூர் அணியும், அரியலூர் அணியும் மோதியது. இதில் தஞ்சாவூர் அணி 63 புள்ளிகளும், அரியலூர் அணி 15 புள்ளிகளும் பெற்றது. 48 புள்ளிகள் வித்தியாசத்தில் தஞ்சாவூர் அணி வென்றது.

ஆண்கள் பிரிவில் முதல் ஆட்டத்தில் பெரம்பலூர் அணியும், திருப்பூர் அணியும் மோதின. இதில் பெரம்பலூர் அணி 38 புள்ளிகள் பெற்று வென்றது. திருப்பூர் அணி 15 புள்ளிகள் பெற்று தோல்வியை தழுவியது. இதேபோல மற்றொரு ஆட்டத்தில் தேனி அணி, நாகப்பட்டினம் அணியை 35-க்கு 30 என்ற புள்ளி கணக்கில் வென்றது.

முன்னதாக தொடக்க விழாவில் போட்டியை மாவட்ட வருவாய் அதிகாரியும், கலெக்டர் பொறுப்புமான சூர்யபிரகாஷ் தொடங்கி வைத்தார். வீரர், வீராங்கனைகள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு கைக்கொடுத்து வாழ்த்துக்களை தெரிவித்தார். போட்டி தொடக்க விழாவில் உதவி கலெக்டர் சரவணமூர்த்தி, மாவட்ட விளையாட்டு அலுவலர் சாந்தி, கபடி சங்க நிர்வாகிகள், அ.தி.மு.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். வீரர், வீராங்கனைகளின் அணிவகுப்பை டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு கும்மராஜா தொடங்கி வைத்தார்.

போட்டி புரோ கபடி போட்டியை போன்று மேட் அமைக்கப்பட்டு நடத்தப்படுகிறது. இதில் புரோ கபடி வீரர்கள், தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்ற வீரர்கள் கலந்துகொண்டுள்ளனர். போட்டியில் முதல் பரிசு பெறும் அணியில் வீரர், வீராங்கனைகளுக்கு தலா ரூ.1 லட்சமும், 2-ம் இடம் பிடிக்கும் அணிக்கு தலா ரூ.75 ஆயிரமும், மூன்றாம் பரிசு பெறும் அணிக்கு தலா ரூ.50 ஆயிரமும் வழங்கப்பட உள்ளது. போட்டிகள் தொடர்ந்து இன்றும் (ஞாயிற்றுக்கிழமை), நாளையும் (திங்கட்கிழமை) நடக்கிறது. கால் இறுதி ஆட்டத்தில் வென்ற அணிகளுக்கு லீக் முறையில் போட்டிகள் நடைபெற உள்ளது.


Next Story