அக்னி ஆற்றில் மணல் கொள்ளையை தடுத்து நிறுத்த வேண்டும் கலெக்டரிடம் விவசாயிகள் கோரிக்கை


அக்னி ஆற்றில் மணல் கொள்ளையை தடுத்து நிறுத்த வேண்டும் கலெக்டரிடம் விவசாயிகள் கோரிக்கை
x
தினத்தந்தி 26 Feb 2018 11:00 PM GMT (Updated: 26 Feb 2018 5:40 PM GMT)

அக்னி ஆற்றில் மணல் கொள்ளையை தடுத்து நிறுத்த வேண்டும் என்று கலெக்டரிடம் விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்டம் புனல்வாசல், மதன்பட்டவூர் பகுதியை சேர்ந்த விவசாயிகள் பலர், கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:–

தஞ்சை மாவட்டத்தில் அக்னி ஆறு தான் மிகப்பெரிய காட்டாறு ஆகும். இதில் படிந்துள்ள மணல் மற்றும் இருகரையோர படுகை மற்றும் நிலங்களில் உள்ள மணல் வளம் பருவமழை காலங்களில் மழைநீரை சேமித்து வைத்து கொண்டு பல கிராமங்களுக்கு ஆண்டுதோறும் நிலத்தடி நீர் வழங்கி விவசாயம் செழிக்க உதவி வருகிறது. இதன்மூலம் பல ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களில் சாகுபடி செய்யப்படுகிறது. இந்தநிலையில் புனல்வாசல், குறிச்சி, மதன்பட்டவூர் ஆகிய ஊர்களின் எல்லை பகுதியில் அக்னி ஆற்றில் எந்திரம் மூலம் டிப்பர் லாரிகளில் சட்டவிரோதமாக மணல் அள்ளப்பட்டு கடத்த முயன்றனர்.

இதை அறிந்த நாங்கள் போலீசாருக்கும், வருவாய்த்துறையினருக்கும் தகவல் தெரிவித்தோம். அவர்கள் விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு 2 டிப்பர் லாரிகளையும் பறிமுதல் செய்தனர். இந்த டிப்பர் லாரிகள் திருச்சிற்றம்பலம் போலீஸ் நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளன. மணல் அள்ளப்படுவதால் நிலத்தடிநீர் பாதிக்கப்படுவதோடு மட்டுமல்லாமல் ஆற்றில் உள்ள மரங்களையும் பிடுங்கியதால் மண் அரிப்பு ஏற்படுகிறது. நிலத்தடி நீர் குறைவதால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும். பல ஆயிரக்கணக்கான நிலங்கள் தரிசாகிவிடும்.


எனவே மணல் கொள்ளையை தடுத்து நிறுத்த வேண்டும். ஆற்றுப்பகுதியில் உள்ள பட்டா நிலங்களில் மணல் அள்ள அனுமதிக்கும் நபர்களின் பட்டாவை ரத்து செய்ய வேண்டும். எங்கள் பகுதியில் அரசு அல்லது தனியார் மண் குவாரி அமைக்கக்கூடாது.

மேற்கண்டவாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story