கோடியக்கரை சரணாலயத்தில் 1 லட்சம் பறவைகள் வனத்துறை அதிகாரிகள் தகவல்


கோடியக்கரை சரணாலயத்தில் 1 லட்சம் பறவைகள் வனத்துறை அதிகாரிகள் தகவல்
x
தினத்தந்தி 28 Feb 2018 4:15 AM IST (Updated: 28 Feb 2018 12:18 AM IST)
t-max-icont-min-icon

கோடியக்கரை சரணாலயத்தில் 1 லட்சம் பறவைகள் உள்ளது என்று வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வேதாரண்யம்,

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே கோடியக் கரையில் 36 சதுர கிலோ மீட்டரில் பசுமை மாறாக்காடுகள் அமைந்துள்ளது. இங்கு பறவைகள் சரணாலயம் மற்றும் வனவிலங்குகள் சரணாலயம் உள்ளது. இந்த சரணாலயத்தில் புள்ளி மான், வெளிமான், முயல், காட்டுப்பன்றி, நரி, குரங்குகள் உள்ளிட்ட விலங்குகள் உள்ளன.

இந்த சரணாலயத்திற்கு ஆண்டு தோறும் அக்டோபர் முதல் மார்ச் வரை சீசன் காலத்தில் 267 வகையான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பறவைகள் வந்து செல்கின்றன. இந்த காலத்தில் அவைகள் இங்கு முட்டை இட்டு குஞ்சி பொறிக்கின்றன. பின்னர் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்று விடுகின்றன.

ஆண்டு தோறும் இந்த சரணாலயத்தில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி நடைபெறும். இந்த பணியில் வனத்துறையினர் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் ஈடுபடுவர்கள். அதன்படி இந்த ஆண்டும் கடந்த மாதம் (ஜனவரி) 21-ந் தேதியும், கடந்த 7-ந் தேதியும் பறவைகள் கணக்கெடுக்கும் பணி 2 முறை நடந்தது.

இந்த பணியில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் வனத்துறையினர் சுமார் 100 பேர் 10 குழுக்களாக பிரிந்து ஈடுபட்டனர். தற்போது கணக்கெடுக்கும் பணி முடிவடைந்து பறவைகளின் விவரம் வெளியிடப்பட்டுள்ளது. இதில் கோடியக்கரை சரணாலயத்தில் தற்போது 1 லட்சம் பறவைகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், இந்த ஆண்டு கோடியக்கரை பறவைகள் சரணாலயத்தில் 2 முறை கணக்கெடுக்கும் பணி நடைபெற்றது. இதில் கல்லூரி, பள்ளி மாணவர்கள் மற்றும் வனத்துறையினர் 100 பேர் ஈடுபட்டனர். இந்த கணக் கெடுக்கும் பணி முடிவின்படி சரணாலயத்தில் செங்கால் நாரை, பூநாரை, பல்வேறு விதமான உள்ளான் வகைகள், கடல் காகம், சிறவி, மயில், கூழக்கிடா உள்ளிட்ட 1 லட்சம் பறவைகள் உள்ளன.

தற்போது வெயில் சுட்டெரிப்பதால் சீசன் முடிவதற்கு முன்பே பறவைகள் தங்களது தாயகத்துக்கு திரும்பி வருகின்றன என்றனர். 

Next Story