விழுப்புரம் அருகே ஓய்வு பெற்ற அரசு அலுவலர் வீட்டில் நகை, பணம் திருட்டு


விழுப்புரம் அருகே ஓய்வு பெற்ற அரசு அலுவலர் வீட்டில் நகை, பணம் திருட்டு
x
தினத்தந்தி 1 March 2018 3:30 AM IST (Updated: 1 March 2018 12:54 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் அருகே ஓய்வு பெற்ற அரசு அலுவலர் வீட்டில் நகை, பணத்தை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

விழுப்புரம்,

விழுப்புரத்தை அடுத்த வளவனூர் அருகே உள்ள பனங்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் ராமமூர்த்தி (வயது 60). ஓய்வு பெற்ற அரசு அலுவலர்.

இவர் கடந்த 24-ந் தேதி தனது குடும்பத்தினருடன் வீட்டை பூட்டிவிட்டு திருப்பூர் மாவட்டம் அவினாசியில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றிருந்தார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு நேற்று முன்தினம் வீடு திரும்பினர்.

அப்போது வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு திடுக்கிட்டனர். உடனே வீட்டிற்குள் சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த 15 பவுன் நகை மற்றும் ரூ.15 ஆயிரம் ரொக்கம் ஆகியவை திருட்டு போயிருந்ததை அறிந்து அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்த தகவலின்பேரில் வளவனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு திருட்டு நடந்த வீட்டில் பதிந்திருந்த தடயங்களை சேகரித்தனர். வீட்டில் ஆள் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள், பூட்டை உடைத்து உள்ளே புகுந்து நகை, பணத்தை திருடிச்சென்றிருப்பது தெரியவந்தது. திருட்டுப்போன நகையின் மதிப்பு ரூ.3 லட்சமாகும். இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருவதோடு நகை, பணத்தை திருடிச்சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story