மதுக்கரையில் உள்ள டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்


மதுக்கரையில் உள்ள டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்
x
தினத்தந்தி 2 March 2018 3:30 AM IST (Updated: 2 March 2018 1:40 AM IST)
t-max-icont-min-icon

மதுக்கரையில் உள்ள டாஸ்மாக் கடையை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கிருஷ்ணராயபுரம்,

கிருஷ்ணராயபுரத்தை அடுத்த சித்தலவாய் ஊராட்சிக்கு உட்பட்ட மதுக்கரை நான்கு ரோட்டில் அரசு டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. இந்த கடையின் அருகில் பஸ் நிறுத்தம் மற்றும் கடைகள் உள்ளன. இந்த டாஸ்மாக் கடை முன்பு எப்போதும் மதுப்பிரியர்களின் கூட்டம் அதிகமாக இருப்பதால் பெண்கள், பள்ளி மாணவ- மாணவிகள் பஸ் நிறுத்தத்தில் இறங்கி வீட்டிற்கு செல்ல அச்சப்படுகின்றனர். மேலும் டாஸ்மாக் கடையில் பார் வசதி இல்லாததால் அருகில் உள்ள விவசாய தோட்டங்களில் மதுப்பிரியர்கள் அமர்ந்து குடித்துவிட்டு பாட்டில்களை அங்கேயே போட்டு உடைத்து விடுகின்றனர். இதனால் விவசாய நிலம் பாழ்படுகிறது.

எனவே மதுக்கரையில் உள்ள டாஸ்மாக் கடையை மூடக்கோரி அப்பகுதி பொதுமக்கள் கடையின் முன்பு நேற்று அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் கரூர் டாஸ்மாக் துணை மேலாளர் பரமேஸ்வரன், மாயனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ராஜ்மோகன், வருவாய் ஆய்வாளர் சரண்யா, கிராம நிர்வாக அலுவலர் கார்த்திக் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அதிகாரிகள் கூறுகையில், இன்னும் 45 நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட டாஸ்மாக் கடையை அகற்றி விடுவதாக உறுதி அளித்தனர். இதனை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் 2 மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
1 More update

Next Story