ஆதனூரில் வீட்டின் பூட்டை உடைத்து 65 பவுன் தங்க நகை கொள்ளை


ஆதனூரில் வீட்டின் பூட்டை உடைத்து 65 பவுன் தங்க நகை கொள்ளை
x
தினத்தந்தி 5 March 2018 11:15 PM GMT (Updated: 5 March 2018 9:39 PM GMT)

ஆதனூரில் வீட்டின் பூட்டை உடைத்து 65 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்துச்சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

வண்டலூர்,

காஞ்சீபுரம் மாவட்டம் ஊரப்பாக்கம் அடுத்த ஆதனூர் மெயின் ரோடு ஏ.வி.எம். நகர் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ்(வயது 43). இவர், சென்னையில் தனியார் கம்பெனிகளுக்கு ஆட்களை வேலைக்கு அனுப்பும் நிறுவனம் நடத்தி வருகிறார்.

இவர், நேற்று முன்தினம் மதியம் வீட்டை பூட்டிவிட்டு சென்னையில் உள்ள உறவினர் வீட்டுக்கு குடும்பத்துடன் சென்று விட்டார். பின்னர் நேற்று காலை வீட்டுக்கு திரும்பி வந்தார். அப்போது வீட்டின் முன்பக்க கதவில் உள்ள பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது, வீட்டில் உள்ள அறைகளில் பொருட்கள் அனைத்தும் நாலாபுறமும் சிதறிக்கிடந்தது. படுக்கை அறையில் சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த பொருட்களும் சிதறி கிடந்தது. பீரோவில் வைத்து இருந்த 65 பவுன் தங்க நகைகளை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்று இருப்பது தெரிந்தது.

இது குறித்து தகவல் அறிந்ததும் வண்டலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு முகமது அஸ்லாம், சம்பவம் நடந்த வீட்டுக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார். சம்பவ இடத்துக்கு காஞ்சீபுரத்தில் இருந்து கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு அங்கு பதிவான கொள்ளையர்களின் கைரேகைகளை பதிவு செய்து கொண்டனர்.

இதே போல ஆதனூர் எம்.ஜி.நகர் 5-வது பிரிவு பகுதியை சேர்ந்தவர் மங்கள கணேஷ்(41). இவரும், நேற்று முன்தினம் வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்று விட்டார். நேற்று காலை வீட்டுக்கு வந்த போது, பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த ரூ.12 ஆயிரத்தை மர்மநபர்கள் திருடிச்சென்று இருப்பது தெரிந்தது.

இந்த 2 திருட்டு சம்பவங்கள் குறித்தும் கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். ஒரே நாளில் ஆதனூர் பகுதியில் 2 வீடுகளில் திருடுப்போன சம்பவம் அந்த பகுதி மக்கள் இடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து ஆதனூர் ஏ.வி.எம். நகர் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கூறியதாவது:-

ஆதனூர் பகுதியில் வீடுகளின் பூட்டை உடைத்து கொள்ளையடிக்கும் சம்பவம் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து நடைபெறுகிறது. இந்த பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபடுவது கிடையாது. நேற்று முன்தினம் காரில் வந்த ஒரு கொள்ளையன், இப்பகுதியில் உள்ள வீட்டின் சுற்றுச்சுவரை ஏறி குதித்தான்.

இதனைபார்த்த பொதுமக்கள், கொள்ளையனை விரட்டினார்கள். ஆனால் கொள்ளையன் காரை விட்டுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டான். கொள்ளையன் வந்த காரை கூடுவாஞ்சேரி போலீசார் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர். எனவே இந்த பகுதியில் இரவு நேரங்களில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபடவேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story