தொழில் போட்டியில் முதியவர் அடித்துக் கொலை வடமாநில வாலிபர் கைது


தொழில் போட்டியில் முதியவர் அடித்துக் கொலை வடமாநில வாலிபர் கைது
x
தினத்தந்தி 6 March 2018 4:45 AM IST (Updated: 6 March 2018 3:15 AM IST)
t-max-icont-min-icon

ஆம்பூரில் தொழில் போட்டியில் முதியவர் அடித்துக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக வடமாநில வாலிபரை போலீசார் கைது செய்தனர். அவரை போலீஸ் துப்பறியும் மோப்ப நாயும் கவ்வி பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆம்பூர்,

வேலூர் மாவட்டம், ஆம்பூர் ரெட்டித்தோப்பு பகுதியை சேர்ந்த ரபீக்அஹமத் என்பவருக்கு சொந்தமான குடோன் உமர் ரோட்டில் உள்ளது. இந்த குடோனை வடமாநிலத்தை சேர்ந்த ராம்ஜிலால் (வயது 60) மற்றும் குல்தீப் (23) ஆகிய 2 பேரும் வாடகைக்கு எடுத்து ஆம்பூரை சுற்றியுள்ள தோல் தொழிற்சாலைகளில் இருந்து துண்டு தோல்களை விலைக்கு வாங்கி வெளிமாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யும் தொழில் நடத்தி வருகின்றனர்.

கடந்த சில நாட்களாக 2 பேருக்கும் இடையே தொழில் போட்டி இருந்ததாகவும், நேற்று முன்தினம் இரவு தொழில் போட்டியில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு குல்தீப், ராம்ஜிலாலிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று அதிகாலையில் ராம்ஜிலால், தோல் குடோனில் தங்கியிருந்த அறையில் தலையின் பின்பக்கம் பலத்த காயங்களுடன் பிணமாக கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஆம்பூர் போலீஸ் துணை சூப்பிரண்டு (பொறுப்பு) பிரகாஷ்பாபு, டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் குல்தீப்பை சந்தேகத்தின் பேரில் ஆம்பூர் டவுன் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

மேலும் கொலையாளியை கண்டுபிடிக்க துப்பறியும் மோப்ப நாய் சிம்பா வரவழைக்கப்பட்டது. மோப்ப நாய் சிம்பா சம்பவம் நடந்த இடத்தில் இருந்து ஓடி, ஆம்பூர் டவுன் போலீஸ் நிலையத்திற்கு சென்று, அங்கு விசாரணைக்காக அழைத்து வரப்பட்ட குல்தீப்பை ‘கவ்வி’ பிடித்தது.

இதனையடுத்து போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில், தொழில் போட்டியால் இருவருக்கும் அடிக்கடி தகராறு இருந்து வந்ததாகவும், நேற்று முன்தினம் மீண்டும் தகராறு ஏற்பட்டதால் குக்கர் மூடியால் ராம்ஜிலால்லை அடித்து கொலை செய்ததும் தெரியவந்தது.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, குல்தீப்பை கைது செய்தனர்.

இந்த சம்பவம் ஆம்பூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story