எந்திரம் மூலம் அறுவடை செய்யும் பணியை நிறுத்தக்கோரி முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம்


எந்திரம் மூலம் அறுவடை செய்யும் பணியை நிறுத்தக்கோரி முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 7 March 2018 4:15 AM IST (Updated: 7 March 2018 1:06 AM IST)
t-max-icont-min-icon

சீர்காழி அருகே எந்திரம் மூலம் அறுவடை செய்யும் பணியை நிறுத்தக்கோரி கிராம நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாய தொழிலாளர்கள் 80 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருவெண்காடு,

நாகை மாவட்டம், சீர்காழி அருகே திருவாலியில் 100 ஏக்கர் பரப்பளவில் சம்பா நெற்பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு இருந்தது. இந்த நெற்பயிர்கள் கதிர் விட்டு அறுவடைக்கு தயாரான நிலையில் இருந்தது. இந்த நெல்லை எந்திரத்தை கொண்டு அறுவடை செய்வது தொடர்பாக விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டு அறுவடை பணிகள் பாதிக்கப்பட்டன. இதுகுறித்து தாலுகா அலுவலகத்தில் பலமுறை அமைதி பேச்சுவார்த்தை நடத்தியும், உடன்பாடு ஏற்படவில்லை. இதைத்தொடர்ந்து எந்திரம் மூலம் அறுவடை செய்ய அனுமதி கேட்டும், அதற்கு பாதுகாப்பு வழங்கக் கோரியும் விவசாயிகள் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, போலீசார் பாதுகாப்புடன் எந்திரத்தை கொண்டு அறுவடை செய்ய உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து திருவாலி கிராமத்தில் போலீசார் பாதுகாப்புடன் எந்திரம் மூலம் அறுவடை பணிகள் தொடங்கியது.

ஆர்ப்பாட்டம்

இந்தநிலையில் ஐகோர்ட்டு அளித்த தீர்ப்பை கண்டித்தும், எந்திரம் மூலம் அறுவடை செய்யும் பணியை உடனே நிறுத்தக்கோரியும் நேற்று முன்தினம் 100-க்கும் மேற்பட்ட விவசாய தொழிலாளர்கள் திருவாலி கிராம நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பின்னர் அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த திருவெண்காடு போலீசார், அங்கு சென்று கிராம நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாய தொழிலாளர்கள் 80 பேரை கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story