எச்.ராஜா உருவப்படத்தை எரித்து, இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்


எச்.ராஜா உருவப்படத்தை எரித்து, இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 7 March 2018 4:30 AM IST (Updated: 7 March 2018 1:07 AM IST)
t-max-icont-min-icon

மன்னார்குடியில் எச்.ராஜா உருவப் படத்தை எரித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மன்னார்குடி,

திரிபுரா மாநில சட்டசபை தேர்தலில் பா.ஜனதா வெற்றி பெற்றது. இந்த நிலையில் அந்த மாநிலத்தில் உள்ள பிலோமினியா என்ற இடத்தில் இருந்த லெனின் சிலை இடிக்கப் பட்டது. இதுகுறித்து கருத்து தெரிவித்த பா.ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா லெனினுக்கும், இந்தியாவுக்கும் என்ன சம்பந்தம் என்றும், தமிழகத்தில் உள்ள பெரியார் சிலையை இடிக்க வேண்டும் என்றும் கூறினார். அவருடைய இந்த கருத்துக்கு எதிர்ப்பு திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பெரியார் சிலை அருகே இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் எச்.ராஜாவின் உருவப்படம் எரிக்கப்பட்டது.

ஆர்ப்பாட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர் வீரமணி தலைமை தாங்கினார். நகர செயலாளர் கலைச்செல்வன், திருவாரூர் மாவட்ட மாணவர் பெருமன்ற ஒருங்கிணைப்பாளர் துரை.அருள்ராஜன், ஒன்றிய துணைச்செயலாளர் ராகவன், விவசாய தொழிலாளர்கள் சங்க ஒன்றிய செயலாளர் மகேந்திரன், இளைஞர் மன்ற ஒன்றிய நிர்வாகிகள் பாப்பையன், பாலமுருகன் உள்பட பலர் கலந்து கொண்டு, எச்.ராஜாவை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். 

Next Story