வாலிபர் கொலை வழக்கில் மனைவி, கள்ளக்காதலன் உள்பட 4 பேர் கைது


வாலிபர் கொலை வழக்கில் மனைவி, கள்ளக்காதலன் உள்பட 4 பேர் கைது
x
தினத்தந்தி 7 March 2018 4:45 AM IST (Updated: 7 March 2018 1:35 AM IST)
t-max-icont-min-icon

லால்குடி அருகே வாலிபரை கழுத்தை அறுத்து கொலை செய்த வழக்கில் மனைவி-கள்ளக்காதலன் உள்பட 4 பேரை லால்குடி போலீசார் கைது செய்தனர்.

லால்குடி,

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே பெருவளநல்லூர் கிராமம் வடக்கு புதுத்தெருவை சேர்ந்த சிங்காரம் மகன் சக்திதேக்கையா(வயது 35). இவர் நேற்று முன்தினம் இரவு தனது மைத்துனர் வயலில் அறுவடை செய்த நெல்லை பாதுகாக்க, காவலுக்காக கட்டிலில் படுத்து இருந்தபோது, கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டார்.

இந்த சம்பவம் குறித்து லால்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயா தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டு கொலையாளிகளை தேடிவந்தனர். மேலும் கொலை செய்யப்பட்ட சக்தி தேக்கையாவின் மனைவி மற்றும் அவருடைய உறவினர்கள், நெருக்கமான நண்பர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில் பெருவளநல்லூர் பகுதியில் கொலையாளிகள் தங்கியுள்ளதாக போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் பெருவளநல்லூர் கிராமம் வடக்கு புதுத்தெருவை சேர்ந்த சந்திரசேகரன் மகன் அஜித்(வயது 24), லால்குடி நாகமையார் தெருவை சேர்ந்த ராஜேந்திரன் மகன் வினோத்(27), பெருவளநல்லூர் கொற்றாங்குளம் தெருவை சேர்ந்த தமிழ்வாணன் மகன் அருண் (26) ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.

அவர்கள் கொடுத்த வாக்குமூலத்தின் படி சக்தி தேக்கையாவின் மனைவி எஸ்தர்செல்வியையும்(35) கைது செய்து தீவிர விசாரணை நடத்தினர். இந்த நிலையில் கொலையாளி அஜித் கொடுத்த வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளதாக போலீசார் கூறியதாவது;-

அஜித்துக்கும், எஸ்தர்செல்விக்கும் இடையே கள்ளக்காதல் இருந்துள்ளது. இதையறிந்த சக்திதேக்கையா, தினமும் குடித்துவிட்டு வந்து தன்னை கொடுமைபடுத்துவதாக, அஜித்திடம் எஸ்தர்செல்வி கூறியுள்ளார். இதனால் அவரை கொலை செய்ய திட்டமிட்ட அஜித், சம்பவத்தன்று தனது நண்பர்களுடன் சென்று வயலில் தூங்கிக்கொண்டிருந்த சக்தி தேக்கையாவை கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார், என்று போலீசார் கூறினர்.

மேலும் விசாரணையின்போது, கொலைக்கு பயன்படுத்திய கத்தியை பெருவளநல்லூர் பகுதியில் புள்ளம்பாடி வாய்க்கால் அருகே உள்ள ஊரணி கிணற்றில் வீசி விட்டதாக அஜித் கூறியதின் பேரில், லால்குடி தீயணைப்பு துறை உதவியுடன் அங்கு சென்ற சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் மற்றும் தனிப்படையினர் கத்தியை தேடி எடுத்தனர். மேலும் அஜித், வினோத், அருண், எஸ்தர்செல்வி ஆகியோரை கைது செய்து லால்குடி குற்றவியல் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். இந்த சம்பவத்தில் கொலை நடந்த 2 நாட்களுக்குள் சம்பந்தப்பட்டவர்களை போலீசார் கைது செய்துள்ளனர், என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story