சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசை வீட்டுக்கு அனுப்ப வேண்டும்


சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசை வீட்டுக்கு அனுப்ப வேண்டும்
x
தினத்தந்தி 7 March 2018 5:17 AM IST (Updated: 7 March 2018 5:17 AM IST)
t-max-icont-min-icon

சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்று பா.ஜனதா மேலிட பொறுப்பாளர் முரளிதரராவ் கூறினார்.

பெங்களூரு,

பெங்களூருவில் மொத்தம் 28 தொகுதிகள் உள்ளன. இந்த 28 தொகுதிகளிலும் ‘பெங்களூருவை பாதுகாப்போம்‘ என்ற பெயரில் பா.ஜனதா பாதயாத்திரை நடத்தி வருகிறது. இந்த நிலையில் நேற்று பெங்களூரு சாம்ராஜ்பேட்டை தொகுதியில் பா.ஜனதா பாதயாத்திரை நடைபெற்றது. இதில் மேலிட பொறுப்பாளர் முரளிதரராவ், சட்டசபை எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.அசோக் உள்ளிட்ட பல நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதில் முரளிதரராவ் பேசியதாவது:-

குண்டர்களின் அட்டகாசத்தில் கர்நாடகம் முதல் இடத்தில் உள்ளது. பா.ஜனதா மற்றும் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் 24-க்கும் அதிகமானோர் கொலை செய்யப்பட்டனர். பூங்கா நகரமான பெங்களூரு இப்போது குற்றங்களின் நகரமாக மாறிவிட்டது. இதனால் மக்கள் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசை வீட்டுக்கு அனுப்ப வேண்டும்.

பா.ஜனதா பிரமுகர் கதிரேஷ் கொலைக்கு காரணம் என்ன என்று இதுவரை தெரியவில்லை. பா.ஜனதா தொண்டர்கள் தொடர்ச்சியாக கொலை செய்யப்படுகிறார்கள். இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிரசாரம் செய்யும் மாநிலங்களில் அந்த கட்சி தோல்வியை தழுவுகிறது.

திரிபுரா, நாகாலாந்து, மேகாலயா, உத்தரபிரதேசம், குஜராத் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்துள்ளது. கர்நாடகத்திலும் காங்கிரஸ் படுதோல்வியை சந்திக்கும்.

இவ்வாறு முரளிதரராவ் பேசினார்.

காங்கிரஸ் தோல்வி அடையும்

சட்டசபை எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.அசோக் பேசுகையில், “சாம்ராஜ்பேட்டையில் பா.ஜனதா 2 முறை வெற்றி பெற்றுள்ளது. நாங்கள் அமைதியான முறையில் பாதயாத்திரையை நடத்தி வருகிறோம். ஆனால் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ரவுடிகள் எங்கள் மீது தாக்குதல் நடத்துகிறார்கள். போலீசார் வேடிக்கை பார்க்கிறார்கள். திரிபுராவில் 9 இந்துக்கள் கொலை செய்யப்பட்டனர். இதனால் அங்கு கம்யூனிஸ்டு கட்சி படுதோல்வி அடைந்தது. கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சியில் பா.ஜனதாவை சேர்ந்த 24 பேர் கொலை செய்யப்பட்டு உள்ளனர். அதனால் கர்நாடகத்திலும் காங்கிரஸ் கட்சி தோல்வி அடையும்“ என்றார். 

Next Story