காவிரி ஆற்றில் மணல் அள்ளி வந்த 3 லாரிகள் பறிமுதல் தனிப்படை போலீசார் அதிரடி நடவடிக்கை


காவிரி ஆற்றில் மணல் அள்ளி வந்த 3 லாரிகள் பறிமுதல் தனிப்படை போலீசார் அதிரடி நடவடிக்கை
x
தினத்தந்தி 7 March 2018 10:45 PM GMT (Updated: 7 March 2018 7:45 PM GMT)

திருவெறும்பூர் அருகே காவிரி ஆற்றில் மணல் அள்ளி வந்த 3 லாரிகளை தனிப்படை போலீசார் பறிமுதல் செய்தனர்.

திருவெறும்பூர்,

திருவெறும்பூர் அருகே உள்ள காவிரி கரை ஓர கிராமங்களில் உள்ள காவிரி ஆற்று பகுதியில் இருந்து சட்ட விரோதமாக மணல் அள்ளி சென்று லட்சக்கணக்கான ரூபாய்க்கு விற்பனை செய்து வருவதாகவும் இதனை தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் கோரி அப்பகுதி மக்கள் நேற்று முன்தினம் போலீஸ் நிலையம் மற்றும் தாலுகா அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

இதனை தொடர்ந்து தாசில்தார் ஷோபா மற்றும் திருவெறும்பூர் இன்ஸ்பெக்டர் மதன் உள்ளிட்டோர் ஆலோசனை கூட்டம் நடத்தினர். இதில் வருவாய் துறை சார்பில் மணல் கடத்தலை தடுத்த நவல்பட்டு வருவாய் ஆய்வாளரை மணல் திருடர்கள் தாக்கிவிட்டு தப்பி சென்ற சம்பவத்தில் அவர் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதை குறிப்பிட்ட தாசில்தார், இனி இது போன்று நடக்காத வகையில் போலீசார் உதவியோடு மணல் கடத்தலை தடுப்பது என முடிவு செய்தனர்.

இதன் அடிப்படையில் திருவெறும்பூர் இன்ஸ்பெக்டர் மதன் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. காவிரி கரை ஓர கிராம பகுதிகளுக்கு சென்று வரும் 3 முக்கிய சாலைகளில் இந்த தனிப்படையினர் பதுங்கி இருந்து கண்காணித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று காலை கிளியூர் பகுதியில் உள்ள காவிரி ஆற்றில் சட்டவிரோதமாக மணல் அள்ளி கொண்டு வந்த 2 லாரி மற்றும் ஒரு மினி லாரியை திருவெறும்பூர் பழைய பஸ் நிலையம் பகுதியில் வைத்து தனிப்படை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினர்.

இதில் மினி லாரியை ஓட்டி வந்த டிரைவர் லாரியில் இருந்து குதித்து ஓடி விட்டார். மற்ற 2 லாரிகளை ஓட்டி வந்த 2 பேரை போலீசார் மடக்கி பிடித்தனர்.

பின்னர் அவர்களிடம் விசாரித்த போது அவர்கள் திருவானைக்காவல் அருகே உள்ள திருவளர் சோலையை அடுத்துள்ள பனையபுரம் குடித்தெருவை சேர்ந்த நாகராஜன் மகன் மோகன் (வயது33), என்பதும் இவர் டிப்பர் லாரியில் ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள மணலை வெளி மாவட்டத்தில் விற்பதற்காக ஏற்றி சென்று கொண்டிருப்பதாகவும் கூறினார்.

மற்றொரு லாரியை ஓட்டி வந்த தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டியை அடுத்த ஐத்திப்பட்டியை சேர்ந்த முத்துசாமி மகன் சப்பாணிமுத்து கூறுகையில் தென் மாவட்டங்களில் மணலுக்கு அதிக விலை கிடைப்பதால் அங்கு கொண்டு போய் விற்பதற்காக 1 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மணலை கடத்தி வந்ததாக கூறினார். 2 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 3 லாரிகளும் பறிமுதல் செய்யப்பட்டன. 

Next Story