காவிரி ஆற்றில் இருந்து தோகைமலை கூட்டுக்குடிநீர் திட்டத்திற்கு தண்ணீர் கொண்டு செல்ல எதிர்ப்பு


காவிரி ஆற்றில் இருந்து தோகைமலை கூட்டுக்குடிநீர் திட்டத்திற்கு தண்ணீர் கொண்டு செல்ல எதிர்ப்பு
x
தினத்தந்தி 8 March 2018 10:45 PM GMT (Updated: 8 March 2018 9:35 PM GMT)

காவிரி ஆற்றில் இருந்து தோகைமலை கூட்டுக்குடிநீர் திட்டத்திற்கு தண்ணீர் கொண்டு செல்ல பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதுகுறித்து நடைபெற்ற அமைதி பேச்சுவார்த்தையில் சுமுக தீர்வு காணப்பட்டது.

குளித்தலை,

குளித்தலை ஊராட்சி ஒன்றியம் வதியம் ஊராட்சிக்கு உட்பட்ட காவிரி ஆற்றில் இருந்து தோகைமலை கூட்டுக்குடிநீர் திட்டத்திற்கு தண்ணீர் கொண்டு செல்வதற்கு வதியம் ஊராட்சி பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதுகுறித்து பல முறை அமைதி பேச்சுவார்த்தை கூட்டம் நடத்தப்பட்டது. இருப்பினும் இத்திட்டம் கைவிடப்படாத காரணத்தால் அப்பகுதி மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். மேலும் இத்திட்டம் கைவிடப்படவில்லை என்றால் தங்களது குடும்ப அட்டை, ஆதார், வாக்காளர் அடையாள அட்டைகளை அரசிடம் ஒப்படைப்பதாகவும் தெரிவித்து வந்தனர். இதையடுத்து கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற அமைதி பேச்சுவார்த்தை கூட்டத்தில் இத்திட்டத்தின்படி தண்ணீர் கொண்டு செல்வதற்காக மேற்கொள்ளப்படும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அதிகாரிகள் உறுதியளித்திருந்தனர்.

இது தொடர்பாக மாவட்ட வருவாய் அதிகாரி சூரியப்பிரகாஷ் தலைமையில் குளித்தலை கோட்டாட்சியர் அலுவலக அறையில் அமைதி பேச்சுவார்த்தை கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் வதியம் காவிரி ஆற்றில் மருங்காபுரி கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் தண்ணீர் ஏற்கனவே கொண்டு செல்லப்படுகிறது. மேலும் அதிகப்படியான மணல் அள்ளப்பட்டுவிட்ட காரணத்தால் நிலத்தடிநீர்மட்டம் குறைந்துவிட்டது. இதன் காரணமாக மரங்கள் பட்டுப்போய்விட்டன. குடிப்பதற்கே தண்ணீர் கிடைப்பதில்லை. இப்பகுதியில் புதிய குடிநீர் திட்டத்திற்கு தண்ணீர் கொண்டு செல்லக்கூடாது. இத்திட்டத்தை கைவிடவேண்டும். மேலும் மருங்காபுரி கூட்டுக்குடிநீர் திட்டம் மூலமே குளித்தலை, தோகைமலை கிராமப்புற மக்களின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்து கொள்ளலாம் என்று அப்பகுதி மக்கள் அதிகாரிகளிடம் தெரிவித்தனர்.

பின்னர் இதில் பங்கேற்ற பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் தங்கள் கருத்துக்களை பொதுமக்களிடம் கூறினர். இறுதியாக மருங்காபுரி கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் குளித்தலை, தோகைமலை ஊராட்சி கிராமங்களின் தண்ணீர் தேவை பூர்த்தி செய்துகொள்ள வேண்டும் என்ற கருத்து ஆய்வு செய்யப்படும். தோகைமலை கூட்டுக்குடிநீர் திட்டம் அமைப்பதற்கு தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தில் இருந்து காவிரி ஆற்றில் நீர்வரத்துள்ள பகுதிகள் ஆய்வு செய்யப்படுவதற்கான முடிவு எடுக்கப்படும். குளித்தலை காவிரி ஆற்றுப்படுகையினை நீர் மண்டலமாக மாற்றம்செய்வதற்கு அரசுக்கு பரிந்துரை செய்ய நடவடிக்கை எடுப்பது தொடர்பாக ஆய்வு செய்யப்படும் என்று முடிவு எடுக்கப்பட்டது.

இந்த கூட்டத்தில் நடக்கும் விவாதங்கள் குறித்து செய்தி சேகரிக்க சென்ற நிருபர்கள் கூட்ட அறைக்குள் அனுமதிக்கப்படவில்லை. புகைப்படம் மட்டுமே எடுக்க அனுமதிக்கப்பட்டனர். இக்கூட்டத்தில் வதியம் பகுதியை சேர்ந்த சுமார் 20 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். மற்ற பொதுமக்கள் அனைவரும் அலுவலகத்தின் கீழே காத்திருந்தனர். கூட்டத்தில் நடந்த விவாதங்கள் குறித்தும், எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்தும் இக்கூட்டத்தில் பங்கேற்ற ஒருவர் கீழே வந்து அங்கு காத்திருந்த பொதுமக்களுக்கு வாசித்து காண்பித்தார். இதன் பின்னர் பொதுமக்கள் அனைவரும் கலைந்து சென்றனர். 

Next Story