நிலம் கையகப்படுத்துவதற்கு எதிராக வழக்கு அரசு பதிலளிக்க ஐகோர்ட்டு உத்தரவு
மும்பையில் ‘மேம்பாட்டுத் திட்டம்–2034’ எனும் பெயரில் மராட்டிய அரசு வரைவு அறிக்கை வெளியிட்டது.
மும்பை,
மெட்ரோ திட்டத்தில் ரெயில் நிலையத்திற்கு அருகில் பணிமனை அமைப்பதற்காக மும்பை ஆரே காலனியில் 25 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் ஆரே காலனி நிலத்தை கையகப்படுத்துவதில் சுற்றுச்சூழல் விதிகள் மீறப்பட்டுள்ளதாக மும்பையை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் சிலர் ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடுத்தனர். அவர்கள் தங்களது மனுவில், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மும்பை மெட்ரோ ரெயில் கழக அதிகாரிகள் வெளியிட்ட அறிக்கையில் ஆரே காலனியில் உள்ள 25 ஹெக்டேர் நிலத்தை சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக குறிப்பிட்டு இருந்தனர். ஆனால் தற்போது சுற்றுச்சூழல் விதிகளில் வேண்டுமென்றே திருத்தம் செய்து ஆரே காலனி நிலத்தை பயன்படுத்த சுற்றுச்சூழல் தடை எதுவும் இல்லை என தங்களது வரைவு அறிக்கையில் கூறியுள்ளனர். எனவே மெட்ரோ ரெயில் திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்த தடை விதிக்க வேண்டும் என கோரியிருந்தனர்.
இந்த வழக்கு விசாரணை நேற்று நீதிபதிகள் தர்மாதிகாரி மற்றும் நாயக் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது இது குறித்து வருகிற 20–ந் தேதிக்குள் பதிலளிக்குமாறு மராட்டிய அரசுக்கு உத்தரவிட்டனர்.