அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு பின்பு சித்தராமையா பேட்டி


அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு பின்பு சித்தராமையா பேட்டி
x
தினத்தந்தி 9 March 2018 5:14 AM IST (Updated: 9 March 2018 5:14 AM IST)
t-max-icont-min-icon

காவிரி நதிநீர் பிரச்சினை பற்றிய கர்நாடக அனைத்துக்கட்சி கூட்டத்தில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு தொடர்பாக சட்ட வல்லுனர்களுடன் ஆலோசித்து மறுஆய்வு மனு தாக்கல் செய்வது குறித்து முடிவு எடுத்திருப்பதாக முதல்-மந்திரி சித்தராமையா தெரிவித்துள்ளார்.

பெங்களூரு,

காவிரி நதிநீர் பிரச்சினை தமிழ்நாடு, கர்நாடகம், புதுச்சேரி, கேரளா ஆகிய 4 மாநிலங்களுக்கு இடையே இருந்து வருகிறது. இந்த பிரச்சினை தொடர்பாக 4 மாநில அரசுகளும் சுப்ரீம் கோர்ட்டில் வழக்குகள் தொடர்ந்தன. அந்த வழக்குகள் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் கடந்த மாதம்(பிப்ரவரி) 16-ந் தேதி இறுதி தீர்ப்பு கூறப்பட்டது. அந்த தீர்ப்பில் தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய தண்ணீரின் அளவை 192 டி.எம்.சி.யில் (ஒரு டி.எம்.சி. என்பது 100 கோடி கனஅடி) இருந்து 177.25 டி.எம்.சி.யாக குறைத்து உத்தரவிட்டு இருந்தது.

மேலும் கர்நாடகத்திற்கு கூடுதலாக 14.75 டி.எம்.சி. தண்ணீரை பயன்படுத்தவும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது. அதே நேரத்தில் காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி ஒழுங்காற்று குழு ஆகிய அமைப்புகளை 6 மாதத்தில் உருவாக்க வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது. ஆனால் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு கர்நாடக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. முதல்-மந்திரி சித்தராமையாவும் காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்கக்கூடாது என்று வலியுறுத்தியுள்ளார்.

இந்த நிலையில், காவிரி நதிநீர் பிரச்சினையில் சுப்ரீம் கோர்ட்டு கூறியுள்ள இறுதி தீர்ப்பு குறித்து விவாதிக்க முதல்-மந்திரி சித்தராமையா தலைமையில் நேற்று மாலையில் பெங்களூரு விதானசவுதாவில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பா.ஜனதா சார்பில் சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் ஜெகதீஷ் ஷெட்டர், ஜனதாதளம்(எஸ்) சார்பில் பசவராஜ் ஹொரட்டி, ஒய்.எஸ்.வி.தத்தா, மந்திரிகள் எம்.பி.பட்டீல், டி.பி.ஜெயச்சந்திரா, ஏ.மஞ்சு, காவிரி படுகையை சேர்ந்த எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் விவசாயிகள் சங்க தலைவர்கள் கலந்து கொண்டனர்.

ஆனால் ஜனதாதளம்(எஸ்) மாநில தலைவர் குமாரசாமி, மேல்-சபை எதிர்க்கட்சி தலைவர் ஈசுவரப்பா உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கலந்து கொள்ளவில்லை. அனைத்துக்கட்சி கூட்டத்தில் காவிரி நதிநீர் பிரச்சினையில் கர்நாடகத்திற்கு ஏற்பட்டுள்ள சாதக, பாதகங்கள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. அதே நேரத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கூடாது என்றும், அவ்வாறு அமைத்தால் கர்நாடகத்தின் உரிமை பறிபோய் விடும் என்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது. மேலும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கூடாது என்பது தொடர்பாக மத்திய அரசை வற்புறுத்துவது என்றும் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

இந்த கூட்டம் முடிந்ததும் முதல்-மந்திரி சித்தராமையா நிருபர்களிடம் கூறியதாவது:-

காவிரி நதிநீர் பிரச்சினையில் கடந்த மாதம்(பிப்ரவரி) 16-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு கூறியது. இந்த தீர்ப்பில் கர்நாடகத்திற்கு கூடுதலாக 14.75 டி.எம்.சி. தண்ணீர் வழங்கியுள்ளது. இதற்கு முன்பு கர்நாடகத்திற்கு 270 டி.எம்.சி. தண்ணீர் கிடைத்தது. சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பால் நமக்கு 284.75 தண்ணீர் கிடைக்கிறது. காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி ஒழுங்காற்று குழுவை 6 வாரத்திற்குள் அமைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. ஆனால் மேலாண்மை வாரியம் எந்த மாதிரி இருக்க வேண்டும் என்றும், அதன் செயல்பாடுகள் குறித்தும் தீர்ப்பில் தெளிவாக குறிப்பிடவில்லை.

சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு குறித்து காவிரி படுகையில் உள்ள எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.எல்.சி.க் கள் மற்றும் எதிர்க்கட்சி தலைவர்களுடன் விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது. குறிப்பாக காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு எதிர்க்கட்சி தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். காவிரி பிரச்சினை தொடர்பாக 4 மாநிலங்களின் தலைமை செயலாளர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் கர்நாடகத்தின் நிலை என்ன? என்பது குறித்து தெளிவாக எடுத்து கூறப்படும்.

முக்கியமாக சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு குறித்து மறுஆய்வு மனு தாக்கல் செய்யலாமா?, அதற்கு சட்டத்தில் இடம் உள்ளதா? என்பது தொடர்பாக மூத்த வக்கீல் பாலி நாரிமண், அரசின் அட்வகேட் ஜெனரல் உள்ளிட்ட சட்ட வல்லுனர்களுடன் ஆலோசனை நடத்தப்படும். அவர்களிடம் அனைத்துக்கட்சி கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு, அரசு அடுத்த என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது குறித்து ஆலோசனை நடத்தப்படும். அரசின் நிலைப்பாடு குறித்தும் சட்ட வல்லுனர்களுடன் தெரிவிக்கப்படும்.

சட்ட வல்லுனர்கள் கூறும் அறிவுரையின் படி மறுஆய்வு மனு தாக்கல் செய்வதா? வேண்டாமா? என்பது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு இருப்பது தொடர்பாகவும் சட்டவல்லுனர்களுடன் ஆலோசிக்கப்படும். காவிரி, மகதாயி, கிருஷ்ணா உள்ளிட்ட நதிநீர் பிரச்சினைகளில் எதிர்க்கட்சிகளுடன் ஆலோசித்து தான் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இனிமேலும் முடிவு எடுக்கப் படும். இந்த விவகாரத்தில் சட்ட வல்லுனர்கள் எடுக்கும் முடிவே இறுதியானது.

இவ்வாறு முதல்-மந்திரி சித்தராமையா கூறினார்.

Next Story