கர்நாடகத்தையே சித்தராமையா கொள்ளையடித்து விட்டார்


கர்நாடகத்தையே சித்தராமையா கொள்ளையடித்து விட்டார்
x
தினத்தந்தி 11 March 2018 5:25 AM IST (Updated: 11 March 2018 5:25 AM IST)
t-max-icont-min-icon

அதிகாரிகளுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு கர்நாடகத்தையே சித்தராமையா கொள்ளையடித்து விட்டார் என்று குமாரசாமி குற்றச்சாட்டு கூறியுள்ளார்.

பெங்களூரு,

ஜனதாதளம்(எஸ்) கட்சியின் மாநில தலைவர் குமாரசாமியிடம் இருந்து தான் பாடம் கற்றுக் கொள்ள வேண்டிய அவசியமில்லை என்றும், அவர் அரசியலுக்கு வருவதற்கு முன்பாக நான் மந்திரியாக இருந்தவன் என்றும், அதிகாரிகளிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது பற்றி தனக்கு நன்கு தெரியும் என்றும் முதல்-மந்திரி சித்தராமையா கூறி இருந்தார்.

இதுபற்றி துமகூருவில் நேற்று குமாரசாமியிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:-

முதல்-மந்திரி பதவியில் இருப்பதால் அதிகார தோரணையிலும், பண பலத்தாலும் ஜனதாதளம்(எஸ்) கட்சி பற்றியும், என்னை பற்றியும் சித்தராமையா வாய்க்கு வந்ததை எல்லாம் பேசி வருகிறார். சட்டசபை தேர்தலில் காங்கிரஸ், பா.ஜனதா கட்சிகளுக்கு தான் போட்டி என்றும், ஜனதாதளம்(எஸ்) கட்சியை கணக்கில் எடுத்து கொள்ளவில்லை என்றும் சித்தராமையா தெரிவித்துள்ளார். இதற்கு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் மக்கள் தக்க பாடத்தை சித்தராமையாவுக்கு புகட்டுவார்கள். தேர்தல் முடிவுகள் வெளியாகும் போது ஜனதாதளம்(எஸ்) கட்சியின் பலம் சித்தராமையாவுக்கு தெரியும்.

அதிகாரிகளுடன் எப்படி நடந்து கொள்வது என்பது பற்றி சித்தராமையா தனக்கு நன்கு தெரியும் என்று கூறியுள்ளார். அதிகாரிகளுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு தான், 5 ஆண்டுகால ஆட்சியில் கர்நாடகத்தை சித்தராமையா கொள்ளையடித்துள்ளார். கமிஷன் பெறுவது தொடர்பாக அதிகாரிகளுடன் ஒப்பந்தம் செய்வதில் சித்தராமையா வல்லவர். எனது தலைமையிலான ஆட்சியில், அவ்வாறு செயல்படவில்லை. எங்கள் ஆட்சியில் அப்படி எதுவும் நடக்கவில்லை.

இவ்வாறு குமாரசாமி கூறினார். 

Next Story