உஷா சாவுக்கு காரணமான இன்ஸ்பெக்டர் மீது கொலை வழக்கு பதிவு செய்யக்கோரி வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்


உஷா சாவுக்கு காரணமான இன்ஸ்பெக்டர் மீது கொலை வழக்கு பதிவு செய்யக்கோரி வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 13 March 2018 4:30 AM IST (Updated: 13 March 2018 2:39 AM IST)
t-max-icont-min-icon

உஷா சாவுக்கு காரணமான போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது கொலை வழக்கு பதிவு செய்யக்கோரி திருச்சியில் கோர்ட்டு பணிகளை புறக்கணிப்பு செய்து வக்கீல்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

திருச்சி,

திருச்சி வக்கீல்கள் சங்கத்தின் அவசர பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் வக்கீல்கள் நேற்று கோர்ட்டு புறக்கணிப்பு செய்தனர். பின்னர் அவர்கள் கோர்ட்டு முன் கூடி நின்று ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். ஆர்ப்பாட்டத்துக்கு வக்கீல் சங்க தலைவர் பன்னீர்செல்வன் தலைமை தாங்கினார்.

கடந்த 7-ந்தேதி திருவெறும்பூர் பகுதியில் வாகன சோதனையின்போது, ஹெல்மெட் அணியாமல் பயணம் செய்ததற்காக ராஜா மற்றும் அவரது மனைவி உஷாவை போலீஸ் இன்ஸ்பெக்டர் காமராஜ் எட்டி உதைத்ததில் உஷா பரிதாபமாக உயிரிழந்தார். உஷா சாவுக்கு காரணமான காமராஜ் மீது தற்போது பதிவு செய்துள்ள வழக்கை மாற்றி அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும். காமராஜ் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரி போராட்டம் நடத்திய 23 பேர் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்குகளை திரும்ப பெறவேண்டும்.

இன்ஸ்பெக்டர் காமராஜின் காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை கண்டித்த வக்கீல்கள் பொன். முருகேசன், ஆதிநாராயணன் ஆகியோர் மீது பதிவு செய்துள்ள வழக்குகளை வாபஸ் பெற வேண்டும். வக்கீல் போஜகுமாரை அவமானப்படுத்திய மாவட்ட தனிப்பிரிவு போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

உஷா மரணத்தில் நீதி கேட்டு போராட்டம் நடத்திய மக்களுக்காக கோர்ட்டில் ஜாமீன் மனு தாக்கல் செய்து இந்த வழக்கில் வாதாட வக்கீல்கள் இளமுருகு, சவுந்தரராஜன், கனகராஜ், கமருதீன் ஆகியோர் கொண்ட குழு அமைப்பது என்றும் ஆர்ப்பாட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. சங்க செயலாளர் ஜெயசீலன், துணை தலைவர் கமால்தீன், இணை செயலாளர் சதீஷ்குமார் உள்பட ஏராளமான வக்கீல்கள் இதில் கலந்து கொண்டனர். 

Next Story