மாவட்டத்தில் பலத்த காற்றுடன் மழை
தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று பலத்த காற்றுடன் பரவலான மழை பெய்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
உப்புக்கோட்டை,
வழக்கமாக ஏப்ரல், மே ஆகிய மாதங்களில் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படும். ஆனால் இந்த ஆண்டு வழக்கத்துக்கு மாறாக மார்ச் மாதத்தில் இருந்தே கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு வரை தேனி மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது.
விவசாய நிலங்களில் தண்ணீர் பற்றாக்குறையால் பயிர்கள் வாடத் தொடங்கியது. இதனால் விவசாயிகள் கவலையடைந்தனர். இந்த நிலையில் வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, நேற்று முன்தினம் தேனி மாவட்டத்தில் ஒரு சில பகுதிகளில் சாரல் மழை பெய்தது.
இந்நிலையில் நேற்று மாவட்டத்தில் தேனி, போடி, குரங்கணி, உப்புக்கோட்டை, டொம்புச்சேரி, வீரபாண்டி, உப்பார்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காலையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பின்னர் பலத்த காற்றுடன் கூடிய மழை பரவலாக பெய்தது. சுமார் 1 மணி நேரம் மழை நீடித்தது. இந்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியது. இதனால் விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் உப்புக்கோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள மானாவாரி நிலங்களில் தண்ணீரின்றி கருகும் நிலையில் இருந்த சோளம், கம்பு ஆகிய பயிர்கள் காப்பாற்றப்பட்டன. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
Related Tags :
Next Story