குமரி மாவட்டத்தில் விதிகளை மீறிய கட்டிடங்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கலாம் மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
குமரி மாவட்டத்தில் விதிகளை மீறிய கட்டிடங்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கலாம் என மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
மதுரை,
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில், குழித்துறை உள்ளிட்ட பகுதிகளில் விதிகளை மீறி கட்டப்பட்ட கட்டிடங்களுக்கு மாவட்ட கலெக்டர், உள்ளூர் திட்டக் குழுமம் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்த நோட்டீசுக்கு எதிராக மதுரை ஐகோர்ட்டில் 65 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுக்களை விசாரித்த நீதிபதிகள் கே.கே.சசிதரன், ஜி.ஆர்.சுவாமிநாதன் ஆகியோர் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:–
இந்த வழக்கில் அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவுக்கு மனுதாரர் தரப்பினர் உரிய பதில் அளிக்கவில்லை. விதிகளை பின்பற்றி தான் கட்டிடங்கள் கட்டப்பட வேண்டும். அடுக்குமாடி குடியிருப்புகள் உரிய பாதுகாப்பு அம்சங்களை கருத்தில் கொண்டு கட்டப்பட்டு இருக்க வேண்டும். எனவே இந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன. விதிகளை மீறி கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள் மீது அதிகாரிகள் சட்டத்துக்கு உட்பட்டு தகுந்த நடவடிக்கை எடுக்கலாம்.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்.