நூலகத்தில் கொள்ளை போன பழமைவாய்ந்த நூல், கிருஷ்ணர் படத்தை மீட்க வேண்டும் வக்கீல்கள் மனு


நூலகத்தில் கொள்ளை போன பழமைவாய்ந்த நூல், கிருஷ்ணர் படத்தை மீட்க வேண்டும் வக்கீல்கள் மனு
x
தினத்தந்தி 15 March 2018 4:30 AM IST (Updated: 14 March 2018 11:08 PM IST)
t-max-icont-min-icon

தஞ்சை சரசுவதி மகால் நூலகத்தில் கொள்ளை போன பழமைவாய்ந்த நூல், கிருஷ்ணர் படத்தை மீட்க வேண்டும் என்று போலீஸ் சூப்பிரண்டிடம் வக்கீல்கள் மனு அளித்தனர்.

தஞ்சாவூர்,

மாமன்னன் ராஜராஜசோழன் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டிய தஞ்சை பெரிய கோவில் உலக பிரசித்தி பெற்றது. சிற்பக்கலைக்கும், கட்டிட கலைக்கும் எடுத்துக்காட்டாக விளங்கும் இந்த கோவில் உலக பாரம்பரிய சின்னமாகவும் விளங்கி வருகிறது. இந்த கோவிலில் இருந்த பஞ்சலோகத்தால் ஆன ராஜராஜசோழன் சிலையும், அவருடைய பட்டத்து இளவரசி லோகமாதேவியார் சிலையும், கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு கொள்ளையடிக்கப்பட்டது. இவற்றின் மதிப்பு ரூ.100 கோடியாகும்.

இந்த கொள்ளை சம்பவம் குறித்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தஞ்சை சரசுவதி மகால் நூலகத்தில் இருந்த பழமைவாய்ந்த நூல், நவரத்தினங்கள் பொறிக்கப்பட்ட கிருஷ்ணர் படம் ஆகியவை கொள்ளை போனது குறித்தும் விசாரணை நடத்த வேண்டும் என்று வரலாற்று ஆராய்ச்சியாளர்கள், சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தினர்.

ஆனால் இது தொடர்பாக புகார் எதுவும் வரவில்லை என்று போலீசார் தெரிவித்தனர்.


இந்த நிலையில் தஞ்சையை சேர்ந்த வக்கீல்கள் ஜீவக்குமார், நெடுஞ்செழியன், உமர்முக்தார், பிரபு, சக்கரவர்த்தி ஆகியோர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமாரை நேற்று நேரில் சந்தித்து ஒரு மனு அளித்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:–

தஞ்சை சரசுவதி மகால் நூலகம் இந்தியாவில் உள்ள புகழ் பெற்ற நூலகமாகும். இங்கு 10 மொழிகளில் 69 ஆயிரத்திற்கு மேற்பட்ட புத்தகங்களும், 39 ஆயிரம் ஓலைச்சுவடிகளும் உள்ளன. சோழர் கால ஓவியங்களும் உள்ளன. 1810–ம் ஆண்டு ‘புதிய ஆகமங்களின் முதலாம் பங்கு’ என்ற நூல் அச்சிடப்பட்டுள்ளது. சரசுவதி மகால் நூலகத்தில் கண்ணாடி பேழையில் இருந்த இந்த நூல், கடந்த 2006–ம் ஆண்டு அக்டோபர் மாதம் 8–ந் தேதி கொள்ளை போனது.

இது குறித்து 2 ஜெர்மானிய சுற்றுலா பயணிகள் மீது புகார் தெரிவிக்கப்பட்டது. துறைவாரியான நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது. இதேபோல 1968–ம் ஆண்டு பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள நவரத்தினங்கள் பொறிக்கப்பட்ட கிருஷ்ணர் படம் கொள்ளை போனது. தஞ்சை பெரியகோவில் சிலைகள் கொள்ளை தொடர்பாக தீவிர விசாரணை நடைபெற்று வரும் நிலையில் சரசுவதி மகால் நூலகத்தில் கொள்ளை போன நூல், கிருஷ்ணர் படத்தையும் மீட்க வேண்டும். அந்த கலை பொக்கி‌ஷங்களை பாதுகாக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


இந்த மனுக்களை பெற்றுக்கொண்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார், இந்த புகாரை அடிப்படையாக வைத்து உரிய விசாரணை நடத்தப்படும். நூல், கிருஷ்ணர் படம் கொள்ளை போனது உண்மையாக இருந்தால் கண்டிப்பாக அவற்றை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார்.

Next Story