அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜிக்கு எதிரான வழக்கு தள்ளுபடி மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜிக்கு எதிரான வழக்கை மதுரை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது.
மதுரை,
ராஜபாளையத்தைச் சேர்ந்த சிவசுப்பிரமணியன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:–
என் சகோதரர் மீனாட்சிசுந்தரம் ராஜபாளையம் நகராட்சி 17–வது வார்டு அ.தி.மு.க. கவுன்சிலராகவும், ராஜபாளையம் நகர எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலராகவும் இருந்தார். இவர் அரசியல் முன் விரோதம் காரணமாக 13.5.2014–ல் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கை ராஜபாளையம் வடக்கு போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் தினகரன் விசாரித்தார். மீனாட்சிசுந்தரம் கொலையில் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி, எம்.எல்.ஏ. கோபால்சாமி உள்பட பலருக்கு தொடர்பு இருப்பதால் அவர்களை இந்த வழக்கில் சேர்க்க வேண்டும் என்று போலீசில் புகார் அளித்தேன்.
இந்த வழக்கின் விசாரணையில் தொடக்கம் முதலே எதிரிகளுக்கு சாதகமாக போலீஸ் இன்ஸ்பெக்டர் செயல்பட்டு வந்தார். இதனால் கொலை வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றக்கோரி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தேன். அந்த மனுவை விசாரித்த கோர்ட்டு, கொலை வழக்கின் இறுதி அறிக்கையை கோர்ட்டில் தாக்கல் செய்ய தடை விதித்தது.
இந்த தடையை மீறி 5 பேரை மட்டும் எதிரியாக காண்பித்து ராஜபாளையம் கோர்ட்டில் இன்ஸ்பெக்டர் இறுதி அறிக்கை தாக்கல் செய்தார். வழக்கில் தொடர்புடைய மற்ற 8 பேரை தண்டனையில் இருந்து காப்பாற்றும் நோக்கத்தில் அவர் செயல்பட்டுள்ளார். இதனால் கொலை வழக்கை வேறு அதிகாரி விசாரணைக்கு மாற்றக்கோரியும், அமைச்சர் ராஜேந்திரபாலாஜி உள்ளிட்டவர்களை வழக்கில் சேர்க்கவும் கோரி ராஜபாளையம் கோர்ட்டில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. எனவே கீழ்கோர்ட்டு உத்தரவை ரத்து செய்து எனது கோரிக்கையை நிறைவேற்ற உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கை நீதிபதி பி.என்.பிரகாஷ் விசாரித்தார். முடிவில், நிலுவையில் உள்ள கொலை வழக்கை 6 மாதங்களில் முடிக்க வேண்டும் என்று கூறி, இந்த வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.