தொலை நோக்கு இல்லாத பட்ஜெட்


தொலை நோக்கு இல்லாத பட்ஜெட்
x
தினத்தந்தி 16 March 2018 11:30 AM IST (Updated: 16 March 2018 11:23 AM IST)
t-max-icont-min-icon

10 அல்லது 20 வருடங்களுக்கு முன்பு,அரசு வரவுசெலவு திட்டத்தை சமர்பிக்கிறது என்றால் எநத பொருளின் விலை ஏறும்? எந்த பொருளின் விலை இறங்கும்? அதனால் நமக்கு என்ன பயன்? என்ற எதிர்பார்ப்பு ஒரு சாதாரண மனிதனுக்கு இருந்தது.

இன்று இந்த அரசின் கடன் சுமை எந்த அளவுக்கு ஏறுமோ என்ற பயமும், திகிலும் இருந்து கொண்டு இருக்கிறது. கடந்த 10 ஆண்டுகளில் கடன் சுமை ரூ.4 லட்சம் கோடியை தாண்டி விட்டது.

மேலும் ,தமிழ் நாட்டில் பொருளாதார வளர்ச்சி என்பது பொருளாதார தொலை நோக்கு பார்வையோடு இருக்க வேண்டும். ஆனால் இன்று சமர்பிக்கப்பட்ட வரவு,செலவு திட்டத்தில் தமிழ் நாட்டுக்கான தொலை நோக்கு பார்வை என்ன என்பது புரியவில்லை.

ஏற்கனவே தமிழ்நாட்டில் இருந்த பல தொழிற்சாலைகள் வேறு மாநிலங்களுக்கு புலம் பெயர்ந்து சென்று கொண்டு இருக்கின்றன. அதை தடுத்து நிறுத்துவதற்கும் ஊக்குவிப்பதற்கும் எந்த விதமான கொள்கையும் அறிவிக்கப்படவில்லை. மேலும் இந்திய அளவில் மொத்த உற்பத்தியில் 16 சதவீதம் விவசாயதுறையின் பங்களிப்பு இருக்கிறது.ஆனால் தமிழ்நாட்டிலோ விவசாயத்துறையின் பங்களிப்பு 20 சதவீதமாக இருக்கிறது..வரும் நிதியாண்டில் மொத்த உணவு உற்பத்தி 110 மில்லியன் டன் என்று தமிழ் நாட்டில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருந்தாலும் அது விவசாயத்துக்கு என்ன வசதிகள் செய்து கொடுக்கப்போகிறார்கள் என்று புரியவில்லை. அங்கொன்றும், இங்கொன்றுமாக உதாரணத்துக்கு பருப்பு கொள்முதலை அரசே நேரடியாக செய்யும் என்று அறிவித்து இருந்தாலும் விவசாயிகளின் மிகப்பெரியகடன் சுமையை போக்குவதற்கு விவசாயிகளின் விளை பொருட்களுக்கு உரிய விலையை நிர்ணயிக்காமல் அவர்கள் துயரத்தை போக்க முடியாது.

இன்னும் ஒரு குறிப்பிட்ட ஒரு விஷயத்தை சொல்ல வேண்டும் என்றால் சென்னை வெள்ள மேலாண்மைக்காக ரூ.2 ஆயிரத்து 100 கோடி ஒதுக்கி இருபதாக நிதியமைச்சர் அறிவித்து இருக்கிறார். இதே போன்று கடந்த ஆண்டுகளிலும் வெள்ளத்தடுப்புக்காக பணம் ஒதுக்கப்பட்டு இருந்தது. ஆனால் வெள்ளம் நின்றபாடில்லை. செய்ய வேண்டியது என்னவென்றல், வெள்ளத்தையும், வறட்சியையும் ஒருங்கிணத்து ப ார்த்து வெள்ளம் வரும் காலங்களில் தண்ணீரை சேமித்தால் வெள்ளத்தின் தீவிரத்தை கட்டுப்படுத்துவது மட்டுமல்லாமல் .குடிநீர் தேவைகளையும் நம்மால் பூர்த்தி செய்யமுடியும்.வறட்சியின் கடுமையையும்,வென்றெடுக்கமுடியும்.இதற்கான ஒருங்கிணைந்த திட்டத்தை முன்னெடுக்காமல் மேலோட்டமாக் வெள்ள மேலாண்மைக்காக பணம் ஒதுக்குவதால் எந்த பலனும் ஏற்பட போவதில்லை.

தமிழ்நாட்டின் வரவு செலவு திட்டமென்பது நிர்வாக செலவினங்களுக்கே பற்றாக்குறையாக இருக்கும் போது வளர்ச்சி திட்டங்களுக்கு எவ்வாறு பணம் ஒதுக்க முடியும்.

குறிப்பாக இன்று விவசாயிகளுக்கு தண்ணீர் தேவை அதிகமாக இருக்கிறது. விவசாயத்துக்கு அதிக அளவில் நிலத்தடி நீரை நம்பி இருக்கின்றனர். ஆனால் நிலத்தடி நீரோ நாளுக்கு நாள் அதல பாதாளத்துக்கு சென்று கொண்டு இருக்கிறது.ஆனாலும் விவசாயிகள் தங்களால் முடிந்த அளவு கடனை வாங்கி கிணறுகளை ஆழப்படுத்தி கொண்டு இருக்கிறார்கள்.ஒரு புறம் விவசாயிகளின் கடன் சுமை ஏறிக்கொண்டு செல்கிறது. மறு புறம் நிலத்தடி நீர் மட்டம் வேகமாக குறைந்து கொண்டு இருக்கிறது.விவசாயிகளின் தற்கொலைக்கு நிலத்தடி நீருக்காக அவர்கள் வாங்கிய கடனே முக்கியமான காரணம் என்றால் அது மிகையாகாது.ஆனால் இந்த வரவு செலவு திட்டத்தில் நிலத்தடி நீரை பெருக்குவதற்கான எந்த விதமான திட்டமும் அறிவிக்கப்படவில்லை. இது ஏமாற்றம் அளிக்கிறது.இன்னும் காலம் தாழ்த்தினால் வரும் காலங்களில் நிலத்தடி நீரை நாம் முழுமையாக இழந்து விவசாயிகள் மிக மோசமான நிலைக்கு தள்ளப்படுவார்கள்.

பேராசிரியர் எஸ்.ஜனகராஜன், பொருளாதார நிபுணர்.

Next Story