தமிழ்நாடு மருத்துவ அலுவலர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


தமிழ்நாடு மருத்துவ அலுவலர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 17 March 2018 3:45 AM IST (Updated: 17 March 2018 1:21 AM IST)
t-max-icont-min-icon

பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் தமிழ்நாடு மருத்துவ அலுவலர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

பெரம்பலூர்,

அனைத்திந்திய மாநில அரசு மருத்துவர்கள் சங்க கூட்டமைப்பின் முடிவின் படி, தமிழ்நாடு மருத்துவ அலுவலர்கள் சங்கம் சார்பில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது. அதன்படி பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு மாவட்ட தமிழ்நாடு மருத்துவ அலுவலர்கள் சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. கூடுதல் மாநில செயலாளர் அனுசுயா தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் அருண்குமார், மாவட்ட செயலாளர் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, தமிழ்நாட்டில் ஏற்கனவே பின்பற்றியபடி, அனைத்து அரசு சுகாதார நிலையங்களுக்கும் முதுநிலை மருத்துவ பட்டபடிப்பில் 50 சதவீத இட ஒதுக்கீட்டை மீண்டும் வழங்க வேண்டும், மாநில அரசுக்கு கீழ் பணிபுரியும் மருத்துவர்களுக்கு, மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும், தேசிய மருத்துவ ஆணைய சட்ட மசோதாவை திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

ஆர்ப்பாட்டத்தில், தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்க மாவட்ட செயலாளர் முருகானந்தம், இந்திய மருத்துவக்கழக பொருளாளர் நெடுஞ்செழியன் உள்பட அரசு மருத்துவர்கள் பலர் பங்கேற்றனர்.

இதேகோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூர் அண்ணா சிலை அருகே மாவட்ட தமிழ்நாடு மருத்துவ அலுவலர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அப்போது கோரிக்கையை நிறைவேற்ற முன்வராத மத்திய-மாநில அரசுகளை கண்டித்து அரசு மருத்துவர்கள் கோஷம் எழுப்பினர்.

மாவட்ட தலைவர் இந்துமதி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் விஜயகாந்த் முன்னிலை வகித்தார். இதில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை மருத்துவர்கள் கொளஞ்சிநாதன், லட்சுமிதரன், மதியழகன், மணிவண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட பொருளாளர் விக்னேஷ் நன்றி கூறினார்.

Next Story