சாலை அமைக்க வலியுறுத்தி கிராம மக்கள் மறியலில் ஈடுபட முயற்சி
மூங்கில்துறைப்பட்டு அருகே சாலை அமைக்க வலியுறுத்தி கிராம மக்கள் மறியலில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
மூங்கில்துறைப்பட்டு,
மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள உலகளப்பாடி ஊராட்சிக்கு உட்பட்டது தாமஸ் நகர். இங்கு 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்கள் கள்ளக்குறிச்சி- திருவண்ணாமலை சாலையில் இருந்து சவேரியார் பாளையம் வழியாக தாமஸ் நகர் செல்வதற்கு வசதியாக இதுவரை சாலை வசதி ஏற்படுத்தி கொடுக்கப்படவில்லை.
இதன் காரணமாக தாமஸ் நகர் பகுதி மக்கள் வெளியூர் மற்றும் மாணவர்கள் பக்கத்து ஊர்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு செல்ல வேண்டுமானால், ஏரிக்கரை பாதை வழியாக தான் செல்ல வேண்டிய நிலை உள்ளது. மேலும் மழைக்காலங்களில் இந்த பாதையில் அதிகளவில் தண்ணீர் தேங்குவதால் பாதை முற்றிலும் துண்டிக்கப்படுகிறது.
இதனால் பொதுமக்கள் வெளியூர் செல்வதற்கும், விவசாயிகள் தாங்கள் சாகுபடி செய்த பொருட்களை வெளியூர்களுக்கு கொண்டு சென்று விற்பனை செய்ய முடியாமலும் அவதி அடைந்து வந்தனர். இதன் காரணமாக இப்பகுதியில் சாலை அமைக்க கோரி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தனர். இருப்பினும் அதிகாரிகள் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.
இதில் பாதிக்கப்பட்ட தாமஸ் நகர் கிராம மக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவதற்காக நேற்று காலை 10 மணி அளவில் கள்ளக் குறிச்சி-திருவண்ணாமலை சாலைக்கு திரண்டு வந்து கொண்டிருந்தனர். இதுபற்றி தகவல் அறிந்த வடபொன்பரப்பி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை தலைமையிலான போலீசார் மற்றும் ஊராட்சி செயலாளர் பாண்டுரங்கன் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட முயன்ற கிராம மக்களை தடுத்து நிறுத்தி பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது கிராம மக்கள், தங்கள் பகுதியில் இருந்து கள்ளக்குறிச்சி-திருவண்ணாமலை சாலைக்கு செல்ல இதுவரை சாலை அமைக்கப்படவில்லை. இதனால் சாலை அமைக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.
அதற்கு போலீசார், உங்கள் கோரிக்கைகள் குறித்து வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மனு கொடுங்கள். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினர். இதை ஏற்ற கிராம மக்கள் மறியலில் ஈடுபடும் முயற்சியை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story