ரூ.13 லட்சம் மீன்பிடி வலைகள் தீ வைத்து எரிப்பு பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர் கைது


ரூ.13 லட்சம் மீன்பிடி வலைகள் தீ வைத்து எரிப்பு பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர் கைது
x
தினத்தந்தி 22 March 2018 3:45 AM IST (Updated: 21 March 2018 11:02 PM IST)
t-max-icont-min-icon

மணவாளக்குறிச்சி அருகே, மத்திய அரசு நிறுவனத்துக்கு சொந்தமான ரூ.13 லட்சம் மதிப்பிலான மீன்பிடி வலைகள் தீ வைத்து எரிக்கப்பட்டது. இதுதொடர்பாக பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியரை போலீசார் கைது செய்தனர்.

மணவாளக்குறிச்சி,

மணவாளக்குறிச்சி அருகே உள்ள முட்டத்தில் மீன்பிடி துறைமுகம் உள்ளது. இந்த துறைமுகத்தில் ராஜீவ்காந்தி நீர்வள உயிரின வளர்ப்பு மையம் என்ற மத்திய அரசுக்கு சொந்தமான நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

இந்த நிறுவனத்திற்கு சொந்தமான மீன்பிடி வலைகளை அம்மாண்டிவிளை அருகே உள்ள இளையான்விளை பகுதியில் ஒரு தென்னந்தோப்பில் உலர்த்தியிருந்தனர்.

தீ வைப்பு

இந்த நிலையில் தென்னந்தோப்பில் உலர வைத்திருந்த மீன்பிடி வலைகளுக்கு யாரோ மர்ம நபர்கள் தீ வைத்து விட்டனர். இதில் ரூ.13 லட்சம் மதிப்புள்ள மீன்பிடி வலைகள் முழுவதும் எரிந்து நாசமானது.

மீன்பிடி வலைகள் மர்ம நபர்களால் தீ வைக்கப்பட்டு நாசமானது குறித்து ராஜீவ்காந்தி நீர்வள உயிரின வளர்ப்பு மைய உதவித்திட்ட மேலாளர் தாமோதர் மணவாளக்குறிச்சி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் முத்துராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை  நடத்தினார்.

இதுதொடர்பாக அம்மாண்டிவிளை அருகே உள்ள பொட்டல்குழி பகுதியை சேர்ந்த பிரதீபன் (வயது 24) என்பவரை சந்தேகத்தின்பேரில் பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது, மத்திய அரசு நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த பிரதீபன் பணிநீக்கம் செய்யப்பட்டதும், அதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் மீன்பிடி வலைகளுக்கு தீ வைத்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் பிரதீபனை கைது செய்தனர்.

Next Story