மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தீ விபத்து நடந்த பகுதியில் நிபுணர் குழுவினர் 3–ம் கட்ட ஆய்வு


மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தீ விபத்து நடந்த பகுதியில் நிபுணர் குழுவினர் 3–ம் கட்ட ஆய்வு
x
தினத்தந்தி 22 March 2018 4:30 AM IST (Updated: 22 March 2018 4:16 AM IST)
t-max-icont-min-icon

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தீ விபத்து நடந்த பகுதியில் நிபுணர் குழுவினர் 3–ம் கட்ட ஆய்வு செய்தனர்.

மதுரை,

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் வீரவசந்தராயர் மண்டபத்தில் உள்ள கடைகளில் கடந்த மாதம் 2–ந்தேதி தீ விபத்து ஏற்பட்டது. இதில் அங்கிருந்த 19 கடைகள் முற்றிலும் எரிந்து நாசமாயின. விபத்து நடந்த பகுதியை பழமை மாறாமல், ஆகம விதிப்படி புனரமைப்பு செய்ய அரசு சார்பில் 12 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. ஓய்வுபெற்ற பொதுப்பணித்துறை என்ஜினீயர் பாலசுப்பிரமணியம் தலைமையில் அமைக்கப்பட்ட இந்த குழுவில் சென்னை ஐ.ஐ.டி. பேராசிரியர், தொல்லியல் துறை நிபுணர்கள் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர். இந்த குழுவினர் கடந்த மாதம் 2 முறை ஆய்வு பணிகளை மேற்கொண்டனர்.

அதன் அடிப்படையில் அந்த பகுதியில் சீரமைக்கும் பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த நிலையில் நிபுணர் குழு தலைவர் என்ஜினீயர் பாலசுப்பிரமணியம் மற்றும் நிபுணர்கள் நேற்று 3–ம் கட்ட ஆய்வு பணியை தொடங்கினார். பின்னர் ஆய்வு குறித்து நிபுணர் குழுவினர் பல்வேறு தகவல்களை தெரிவித்தனர்.

அதில் வீரவசந்தராயர் மண்டபத்தின் வடக்கு பகுதியில் இடிபாடுகள் முற்றிலும் அகற்றப்பட்டுள்ளது. மீதம் உள்ள பகுதியில் உள்ள இடிபாடுகள் 15 நாட்களில் அகற்றப்படும். தூண்களை பழமை மாறாமல் புனரமைப்பு பணி செய்ய முன்னோடி ஸ்பதிகள் அடங்கிய பட்டியல் தயாரிக்கப்பட்டு, அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மார்த்தாண்டம், சேலம் மாவட்டம் ராசிபுரம் ஆகிய பகுதியில் உள்ள கற்களின் மாதிரிகள் எடுத்து அதன் உறுதித்தன்மை குறித்து ஆய்வு செய்ய சென்னை ஐ.ஐ.டி.க்கு அனுப்பி உள்ளோம். அதன் முடிவில் எங்கு தரமான கற்கள் கிடைக்கிறதோ அதனை பயன்படுத்த உள்ளோம். விபத்து நடந்த பகுதியில் சேதம் அடைந்த கற்தூண்கள் பெரும்பான்மையானவை நீக்கப்பட்டு விட்டது. மீதம் உள்ள கற்தூண்களின் உறுதித்தன்மையை ஆய்வு செய்ய ஐ.ஐ.டி.யில் இருந்து 4 பேர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த தூண்களில் அல்ட்ரா சோனிக் சவுண்டு டெஸ்ட் முறையில் கற்களில் ஒலி அனுப்பி அதன் உறுதித்தன்மையை ஆய்வு செய்ய உள்ளோம்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

விபத்து நடந்த பகுதியை ஆய்வு செய்ய சென்னையில் இருந்து தடயவியல் இயக்குனர் இன்று வருகிறார். அப்போது தீயில் எரிந்த கடை உரிமையாளர்கள் ஆஜராக கோவில் நிர்வாகம் அவர்களிடம் தெரிவித்துள்ளது.

Next Story