திருப்பூரில் சகோதரியை கொலை செய்த வழக்கில் இளம்பெண் கள்ளக்காதலனுடன் கைது


திருப்பூரில் சகோதரியை கொலை செய்த வழக்கில் இளம்பெண் கள்ளக்காதலனுடன் கைது
x
தினத்தந்தி 22 March 2018 10:00 PM GMT (Updated: 22 March 2018 6:30 PM GMT)

திருப்பூரில் சகோதரியை கொலை செய்த வழக்கில் இளம்பெண் கள்ளக்காதலனுடன் கைது செய்யப்பட்டார். அத்தானை 2-வது திருமணம் செய்து கொள்வதற்காக தீர்த்துக்கட்டி இருப்பது போலீஸ் விசாரணையில் அம்பலமாகி உள்ளது.

வீரபாண்டி, 

திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தை சேர்ந்தவர் பூபாலன் (வயது 28). இவருடைய மனைவி நதியா (24). இவர்களுடைய மகள் தக்‌ஷிதா (4), மகன் சுதர்சன் (2). பூபாலன் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருப்பூர் மாவட்டம் வீரபாண்டியை அடுத்த இடுவம்பாளையத்தில் சொந்தமாக வீடு கட்டி குடியிருந்து வருகிறார். மேலும் பனியன் நிறுவனங்களில் ஒப்பந்தம் எடுத்து தொழிலாளர்களை வைத்து பல்வேறு வேலைகளை செய்து வருகிறார். இதனால் பூபாலன் வசதியாக வாழ்ந்து வருகிறார். பூபாலனுடன் அவருடைய தம்பிகள் மணிபாலன் மற்றும் ஜீவானந்தம் ஆகியோரும் தங்கி இருந்து வேலை செய்து வந்தனர். அதே பகுதியில் நதியாவின் சித்தி மகள் ரேகாவும் (22) குடியிருந்து வருகிறார். இவர் அவ்வப்போது நதியாவின் வீட்டிற்கு வந்து செல்வதை வழக்கமாக கொண்டிருந்தார்.

இந்த நிலையில் கடந்த 14-ந்தேதி காலையில் பூபாலன், அவருடைய தம்பிகள் மணிபாலன் மற்றும் ஜீவானந்தம் ஆகியோர் வேலைக்கு சென்று விட்டனர். இதனால் 2 குழந்தைகளுடன் நதியா மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். வேலைக்கு சென்ற மணிபாலன் மட்டும் அன்று இரவு முதலில் வீட்டிற்கு முதலில் வந்தார். அப்போது பூபாலனின் வீடு திறந்து கிடந்தது. குழந்தை சுதர்சன் மட்டும் வாசலில் அழுது கொண்டிருந்தான். குழந்தையை எடுப்பதற்காக மணிபாலன் சென்றபோது வீட்டிற்குள், நதியா கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் கொடூரமாக கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். மேலும் குழந்தை தக்‌ஷிதாவை காணவில்லை. இது குறித்து தனது அண்ணன் பூபாலனுக்கும், வீரபாண்டி போலீசாருக்கும் தகவல் தெரிவித்தார்.

உடனே போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமொழி மற்றும் போலீசார் சம்பவம் நடந்த வீட்டிற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது நதியா அணிந்து இருந்த 5 பவுன் நகை திருட்டு போயிருப்பது தெரியவந்தது. பின்னர் போலீஸ் மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. இந்த மோப்பநாய், கொலைநடந்த வீட்டில் இருந்து மோப்பம் பிடித்து சிறிது தூரம் ஓடியது. ஆனால் யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை. இதையடுத்து நதியாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

இந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடி வந்தனர். மேலும் கொலையாளிகளை பிடிக்க மாநகர போலீஸ் கமிஷனர் நாகராஜன் உத்தரவின் பேரில் துணை கமிஷனர் (சட்டம்-ஒழுங்கு) கயல்விழி கண்காணிப்பில் துணை கமிஷனர் தங்கவேலு தலைமையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமொழி, போலீசார் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்த தனிப்படை போலீசார் கொலையாளிகளை பிடிக்க தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது நதியா கொலை செய்யப்படுவதற்கு முன்பாக அந்த வீட்டிற்கு நதியாவின் சித்தி மகள் ரேகா வந்ததாகவும், அவர்தான் நதியாவின் மகள் தக்‌ஷிதாவை எடுத்து சென்றதாகவும் தெரியவந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் அவரை பிடித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணைக்கு பின்னர் சகோதரி நதியாவை, தனது கள்ளக்காதலன் நாகராஜ் மூலம் கொடூரமாக கொலை செய்ததாக ரேகா ஒப்புக்கொண்டார். இதையடுத்து ரேகாவையும் அவருடைய கள்ளக்காதலன் நாகராஜையும் (25) தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

எனது சொந்த ஊர் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் ஆகும். எனது கணவர் கஜேந்திரன். எங்களுக்கு தனுஷ்கோடி என்ற மகனும், நிவேதிதா என்ற மகளும் உள்ளனர். எனக்கும் செங்கத்தை சேர்ந்த நாகராஜ் (25) என்பவருக்கும் இடையே முதலில் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் கள்ளக்காதலாக மாறியது. எங்களது கள்ளத்தொடர்பு எனது கணவருக்கு தெரிந்து விட்டதால் அவர் என்னை விட்டு பிரிந்து சென்று விட்டார். இதையடுத்து எனக்கும், என்னுடைய கணவருக்கும் இடையேயான விவகாரத்து வழக்கு கோர்ட்டில் நடந்து வருகிறது. இதனால் நான் குழந்தைகளை அழைத்துக்கொண்டு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருப்பூர் மாவட்டம் இடுவம்பாளையம் வந்து வாடகை வீட்டில் குடியிருந்து வருகிறேன். நான் இடுவம்பாளையம் வந்தபோது, நாகராஜியும் என்னுடன் வந்து இடுவம்பாளையம் பகுதியில் தங்கி இருந்து பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.

இந்த நிலையில் நதியாவின் கணவர் பூபாலன் பனியன் நிறுவனங்களில் ஒப்பந்த பணி எடுத்து சொந்த வீடு, வசதியுடன் இருப்பது தெரியவந்தது. எனக்கு பூபாலன் அத்தான் உறவு முறை என்பதால் அவருடனான நட்பை நெருக்கமாக்கிக்கொண்டேன். அப்போது “என்னை திருமணம் செய்து கொள்ளுங்கள்” என்று அவரிடம் கூறினேன். அவரும், விவகாரத்து வழக்கு முடிந்தவுடன், என்னை 2-வதாக திருமணம் செய்து கொள்வதாக உறுதி அளித்தார்.

இருப்பினும் பூபாலனின் மனைவி நதியா உயிரோடு இருந்தால், தன்னால் பூபாலனுடன் நெருக்கமாக இருக்க முடியாது என்றும், எனவே பெரியம்மா மகள் நதியாவை தீர்த்துக்கட்டினால், பூபாலன் முழுமையாக கிடைப்பார் என்று நினைத்தேன். எனவே நதியாவை கொலை செய்ய திட்டம் தீட்டினேன். இந்த திட்டத்தை எனது கள்ளக்காதலன் நாகராஜியிடம் தெரிவித்தார். அவரும் இந்த திட்டத்திற்கு சரி என்று சம்மதித்தார். நதியாவை கொலை செய்யும்போது கொலையாளி யார் என்று அடையாளம் தெரியக்கூடாது என்பதற்காக எனது கள்ளக்காதலன் நாகராஜ் கடந்த 1 மாதமாக தாடி வளர்த்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த 14-ந்தேதி இரவு 7 மணிக்கு நாகராஜீயும், நானும் நதியா வீட்டிற்கு புறப்பட்டு சென்றோம். நதியாவின் வீட்டில் இருந்து சற்று தொலைவில் நாகராஜை காத்திருக்க சொல்லி விட்டு, நான் மட்டும் நதியா வீட்டிற்கு சென்றேன். அங்கு குழந்தைகளுடன் நதியா அமர்ந்து இருந்தார். அங்கு சிறிது நேரம் அவருடன் பேசிவிட்டு, தக்‌ஷிதாவை என்னுடன் அழைத்து செல்கிறேன் என்று கூறிவிட்டு தக்‌ஷிதாவை எடுத்து சென்றேன். ஏனெனில் நதியாவை கொலை செய்யும் போது, 4 வயது நிரம்பிய தக்‌ஷிதா கொலையாளியை அடையாளம் காட்டி விடும் என்பதால் கச்சிதமாக இந்த ஏற்பாடு செய்தேன். பின்னர் தக்‌ஷிதாவை எடுத்துக்கொண்டு நதியாவின் வீட்டில் இருந்து வெளியே வந்ததும் அங்கு காத்து இருந்த நாகராஜியிடம் செய்கை மூலம் காரியத்தை முடித்து விடு என்று கூறினேன். நதியாவின் செல்போனையும் திருடிக்கொண்டு சென்று விட்டேன். இதையடுத்து நாகராஜ் அங்கு சென்று, நதியாவின் கழுத்தை அறுத்து கொன்று விட்டு, அவர் அணிந்து இருந்த 5 பவுன்நகையை பறித்துக்கொண்டு பெங்களூரு சென்று விட்டார். பின்னர் அந்த நகையை திருப்பூர்-பல்லடம் சாலையில் உள்ள அடகுகடையில் அடகு வைக்க நாகராஜ் முயன்றபோது அவரையும் போலீசார் கைது செய்தனர்.

இதையடுத்து அவரிடம் இருந்து 5 பவுன் நகையையும், அவருடைய வீட்டின் பின்புறம் கொலைக்கு பயன்படுத்த மண்ணில் புதைத்து வைத்து இருந்த கத்தி மற்றும் கொலை செய்தபோது அணிந்து இருந்த சட்டை ஆகியவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் நதியாவின் செல்போனும் கைப்பற்றப்பட்டது.

இதையடுத்து ரேகாவையும், அவருடைய கள்ளக்காதலன் நாகராஜையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். ஆசைப்பட்ட அத்தானை அடைந்தே தீருவது என்பதற்காக, அவருடைய மனைவியை, கள்ளக்காதலனுடன் சேர்ந்து ஒரு இளம்பெண்ணே கொடூரமாக கொலை செய்து இருக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story