சட்டசபை தேர்தலில் போட்டியிட தமிழர்களுக்கும் - தொழிலாளர் பிரிவு பிரமுகர்களுக்கும் சீட் வழங்க வேண்டும்


சட்டசபை தேர்தலில் போட்டியிட தமிழர்களுக்கும் - தொழிலாளர் பிரிவு பிரமுகர்களுக்கும் சீட் வழங்க வேண்டும்
x
தினத்தந்தி 23 March 2018 4:34 AM IST (Updated: 23 March 2018 4:34 AM IST)
t-max-icont-min-icon

சட்டசபை தேர்தலில் போட்டியிட தமிழர்களுக்கும்-தொழிலாளர் பிரிவு பிரமுகர்களுக்கும் ‘சீட்’ வழங்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் மேலிடத்துக்கு எஸ்.எஸ்.பிரகாசம் கோரிக்கை விடுத்துள்ளார்.

பெங்களூரு,

கர்நாடக காங்கிரஸ் கமிட்டியின் பொதுச்செயலாளரும், கர்நாடக காங்கிரஸ் தொழிலாளர் பிரிவு தலைவருமான எஸ்.எஸ்.பிரகாசம் நேற்று பெங்களூருவில் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

கர்நாடக சட்டசபை தேர்தலில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் தமிழக காங்கிரஸ் தலைவர்களை வைத்து பிரசாரம் செய்ய கர்நாடக காங்கிரஸ் பிரசார குழு முடிவு செய்துள்ளது. கர்நாடகத்தில் 80 லட்சம் தமிழர்கள் வாழ்ந்து வருகிறார்கள். ஆனாலும், காவிரி நீர் பங்கீடு மற்றும் மொழி பிரச்சினை ஏற்படும்போது தமிழர்களின் உரிமைகளை சட்டசபையில் பேச எம்.எல்.ஏ.க்கள் இல்லை. இது வருத்தமளிக்கிறது.

இதனால் வருகிற சட்டசபை தேர்தலில் பெங்களூரு ராஜாஜி நகர், சி.வி.ராமன் நகர், புலிகேசி நகர் மற்றும் கோலார் தங்கவயல் உள்பட தமிழர்களின் வாக்குகள் அதிகமுள்ள 10 தொகுதிகளில் தமிழர்களுக்கு போட்டியிட காங்கிரஸ் கட்சி வாய்ப்பளிக்க வேண்டும். இதுதொடர்பாக அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, முதல்-மந்திரி சித்தராமையா, கர்நாடக காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வர் ஆகியோரை சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளேன். இதேபோல், மாநிலத்தில் பிரசாரம் மேற்கொள்ள உள்ள தமிழக காங்கிரஸ் தலைவர்களும், கர்நாடக தேர்தலில் தமிழர்களுக்கு போட்டியிட ‘சீட்’ கொடுக்க கட்சி மேலிடத்துக்கு கோரிக்கை விடுக்க வேண்டும்.

இதேபோல், தொழிலாளர்களின் நலனை காக்கும் வகையில் 10 தொகுதிகளில் காங்கிரஸ் தொழிலாளர் பிரிவு பிரமுகர்களுக்கு ‘டிக்கெட்’ வழங்க வேண்டும். வருகிற தேர்தலில் குறைந்தபட்சம் 5 தமிழர்களுக்கு போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என்று நம்புகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story