பாக்கனா பகுதியில் காட்டு யானையை விரட்ட கும்கிகள் வரவழைப்பு


பாக்கனா பகுதியில் காட்டு யானையை விரட்ட கும்கிகள் வரவழைப்பு
x
தினத்தந்தி 23 March 2018 9:45 PM GMT (Updated: 23 March 2018 8:52 PM GMT)

பாக்கனா பகுதியில் காட்டு யானையை விரட்ட 2 கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டன.

பந்தலூர்,

பந்தலூர் தாலுகா பாக்கனா பகுதியில் கடந்த 2 வாரங்களாக காட்டு யானை ஒன்று முகாமிட்டு உள்ளது. அது சாலையோரம் நின்ற ஒரு காரை சேதப்படுத்தியது. அது, சில நேரத்தில் சாலையில் நடந்து சென்று பொதுமக்களை துரத்துகிறது. மேலும் அந்த காட்டு யானை, வாழை, தென்னை, பாக்கு உள்ளிட்ட விவசாய பயிர்களை வேரோடு பிடுங்கி தின்று அட்டகாசம் செய்தது. இதனால் பொதுமக்கள் பீதி அடைந்தனர்.

எனவே காட்டு யானையை விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வனத்துறையினரிடம் அப்பகுதி மக்கள் மனு கொடுத்தனர். இது குறித்து கூடலூர் வன அலுவலர் திலிப் உத்தரவின் பேரில் முதுமலை புலிகள் காப்பகத்தில் இருந்து கும்கி யானைகளை வரவழைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி சேரன், முதுமலை ஆகிய 2 வளர்ப்பு யானைகள் பாக்கனா கிராமத்துக்கு நேற்று லாரிகளில் கொண்டு வரப்பட்டது.

இதையடுத்து பிதிர்காடு வனச்சரகர் மனோகரன், வன காப்பாளர்கள் ராமச்சந்திரன், ராஜேஷ்குமார், ஹாலன், நஞ்சுண்டன் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள், அட்டகாசம் செய்த காட்டு யானையை தேடும் பணியில் ஈடுபட்டு உள்ளனர். இதனால் காட்டு யானையை விரட்டுவதற்காக கொண்டு வரப்பட்ட கும்கி யானைகள் பாக்கனா கிராமத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.

இது குறித்து வனத்துறையினர் கூறும்போது, கிராம மக்களுக்கு பீதியை ஏற்படுத்தும் வகையில் அட்ட காசம் செய்து வந்த காட்டு யானை தற்போது எந்த பகுதியில் நிற்கிறது என்பது தெரிய வில்லை. அதை கண்டறிய தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகிறோம். காட்டு யானை ஊருக்குள் வந்தால் கும்கி யானைகளின் உதவியுடன் அதை வனப்பகுதிக்குள் விரட்டியடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். 

Next Story