தாயை திட்டியதால் தொழிலாளியை கழுத்தை அறுத்து கொலை செய்ததாக கைதான வாலிபர் போலீசில் வாக்குமூலம்


தாயை திட்டியதால் தொழிலாளியை கழுத்தை அறுத்து கொலை செய்ததாக கைதான வாலிபர் போலீசில் வாக்குமூலம்
x
தினத்தந்தி 24 March 2018 4:15 AM IST (Updated: 24 March 2018 3:49 AM IST)
t-max-icont-min-icon

எனது தாயை திட்டியதால் தொழிலாளியை கழுத்தை அறுத்து கொன்றதாக போலீசில் அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

இளம்பிள்ளை,

இளம்பிள்ளை அருகே தொழிலாளி கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்ட வழக்கில் வாலிபர் கைது செய்யப்பட்டார். எனது தாயை திட்டியதால் தொழிலாளியை கழுத்தை அறுத்து கொன்றதாக போலீசில் அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

இந்த பரபரப்பு சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

சேலம் மாவட்டம் இளம்பிள்ளை சந்தைப்பேட்டை அருகே ஏரிக்கரையில் முனியப்பன் கோவில் உள்ளது. இந்த கோவில் அருகே நேற்று முன்தினம் காலை ஒருவர் கழுத்து அறுக்கப்பட்டும், கத்தியால் குத்தப்பட்டும் படுகொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுபற்றி அறிந்ததும் மகுடஞ்சாவடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாரணவீரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார்கள்.

சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜன், சங்ககிரி துணை சூப்பிரண்டு அசோக்குமார் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர். இந்த கொடூர கொலை குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள். விசாரணையில், கொலை செய்யப்பட்டவர் சந்தைப்பேட்டை ஏரிக்கரை பகுதியைச் சேர்ந்த ராஜு (வயது 45) என்பது தெரியவந்தது. ராஜூ கூலித்தொழிலாளியாக வேலைபார்த்து வந்தார். ராஜூவை கொலை செய்தவர் யார்? காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் விசாரித்து கொலையாளியை தேடி வந்தனர்.

இந்தநிலையில் ராஜூ கொலை தொடர்பாக இளம்பிள்ளை அருகே உள்ள மெய்யனூர் பனங்காடு பகுதியைச் சேர்ந்த ஜெயவேல் (23) என்பவர் நேற்று காலை இளம்பிள்ளை கிராம நிர்வாக அலுவலர் செல்வத்திடம் சரண் அடைந்தார். செல்வம் இதுபற்றி மகுடஞ்சாவடி போலீசாருக்கு தகவல் கொடுத்தார். போலீசார் அங்கு வந்து ஜெயவேலை கைது செய்து விசாரணை நடத்தினார்கள்.

அப்போது ஜெயவேல் போலீசில் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறி இருப்பதாவது:-

எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. கடந்த 21-ந்தேதி இளம்பிள்ளை ஏழுமாத்தானூரில் உள்ள டாஸ்மாக் கடைக்கு நான் சென்றேன். அப்போது ராஜூவும் அங்கு வந்தார். இருவரும் மது குடித்தோம். அப்போது ஏற்பட்ட தகராறில் ராஜூ, எனது தாயை தகாத வார்த்தைகளால் திட்டினார். இதன்பின்னர் ராஜூ அங்கிருந்து புறப்பட்டு முனியப்பன் கோவில் அருகே வந்து புரோட்டா சாப்பிட்டுக்கொண்டு இருந்தார்.

அப்போது நான் அங்கு கத்தியுடன் சென்றேன். ஆத்திரத்துடன் ராஜூ மீது பாய்ந்து நான் கொண்டு சென்ற பனியனை ராஜூவின் தலையில் போட்டு முகத்தை முடினேன். பின்னர் கத்தியால் ராஜூவின் கழுத்தை அறுத்து, உடலிலும் கத்தியால் குத்தினேன். இதில் ராஜூ சம்பவ இடத்திலேயே இறந்தார். பின்னர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டேன். கொலை குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி கொலையாளியை தேடி வந்ததை அறிந்ததும் சரண் அடைந்தேன் என அவர் வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Next Story