குரங்கணி தீ விபத்தில் இறந்த தஞ்சை பெண்ணின் குடும்பத்துக்கு சரத்குமார் ஆறுதல்


குரங்கணி தீ விபத்தில் இறந்த தஞ்சை பெண்ணின் குடும்பத்துக்கு சரத்குமார் ஆறுதல்
x
தினத்தந்தி 26 March 2018 4:30 AM IST (Updated: 25 March 2018 10:53 PM IST)
t-max-icont-min-icon

குரங்கணி தீ விபத்தில் இறந்த தஞ்சை பெண்ணின் குடும்பத்துக்கு சரத்குமார் ஆறுதல் கூறினார்.

தஞ்சாவூர்,

மேட்டூரில் இருந்து மயிலாடுதுறை வரை காவிரி உரிமை மீட்பு பேரணியை அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் மேற்கொண்டார். அவர் நேற்று திருச்சி வழியாக தஞ்சை வந்தார். தஞ்சை வந்த அவர் குரங்கணி தீ விபத்தில் இறந்த தஞ்சை பிலோமினா நகரை சேர்ந்த சாய்வசுமதியின் வீட்டிற்குசென்றார்.

அங்கிருந்த சாய்வசுமதியின் தந்தை கிருஷ்ணமூர்த்தி மற்றும் உறவினர்களுக்கு ஆறுதல் கூறினார். அப்போது அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி மாவட்ட செயலாளர்கள் குடந்தை ராஜா, நெப்போலியன்சேவியர் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.


பின்னர் சரத்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:–

குரங்கணி தீ விபத்தில் இறந்தவரின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறினேன். இழப்பு என்பது எதையும் ஈடு செய்ய முடியாது. இறந்த சாய்வசுமதி மலையேறும் பயிற்சி செல்வதற்கு உறுப்பினராக இருந்துள்ளார். மேலும் அவர்கள் முறையாக விண்ணப்பித்து அனுமதி பெற்று சென்றுள்ளனர். இது போன்ற இடங்களில் போதிய வசதிகள், காட்டுத்தீயை அணைக்கும் வசதி, எச்சரிக்கை வசதி போன்றவை இருந்ததா? என தெரியவில்லை. இது போன்ற இடங்களில் போதுமான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும்.

மலையேறும் பயிற்சி செல்லும் இடங்களுக்கு பயிற்சிக்கு அழைத்து செல்பவர்கள் முன்னெச்சரிக்கையாக செய்திருக்க வேண்டும். இது போன்ற விபத்துகளில் எப்படி நடந்த கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தி இருக்க வேண்டும். ஆனால் எந்தவித முன்னேற்பாடுகளும் இல்லாமல் சென்றது இந்த விபத்துக்கு காரணம். கோவில்கள், வனப்பகுதிகளில் இது போன்ற தீவிபத்து ஏற்படாமல் தடுக்க முறையான பராமரிப்பு பணிகளை செய்ய வேண்டும்.


காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு பதிலாக குழு அமைத்து இருப்பது கண்துடைப்பு தான். ஆனால் இதில் வல்லுனர்களை அமைக்கவில்லை. ஏதோ பெயரளவிற்கு நியமித்துள்ளனர். இந்த குழு எப்போது தண்ணீரை பகிர்ந்து கொடுக்கும் என்ற உத்தரவாதமும் இல்லை. விவசாயிகள் சங்கத்தினர் டெல்லியில் நடத்தும் உண்ணாவிரதப்போராட்டத்தில் நான் 28–ந்தேதி கலந்து கொள்கிறேன்.

காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்ற எண்ணம் மத்திய அரசுக்கு இல்லை. டெல்டா பகுதி மக்கள் மட்டும் அல்ல தமிழக மக்களும் பல பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே இதை தட்டிக்கேட்க மக்களிடம் விழிப்புணர்வு ஏற்பட வேண்டும். அப்போது தான் இது போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும். ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெறும் போராட்டம் வெற்றி பெற வாழ்த்துகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story