வேட்பு மனு தாக்கலின் போது அ.தி.மு.க.-அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் மோதல்


வேட்பு மனு தாக்கலின் போது அ.தி.மு.க.-அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் மோதல்
x
தினத்தந்தி 26 March 2018 11:00 PM GMT (Updated: 26 March 2018 7:54 PM GMT)

கரூரில் கூட்டுறவு சங்க தேர்தல் வேட்புமனு தாக்கலின் போது, அ.தி.மு.க.-அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் மோதிக்கொண்டனர். அப்போது போலீஸ் வாகனம் மீது கல்வீசப்பட்டது. கூட்டுறவு சங்க அலுவலக கண்ணாடியும் உடைக்கப்பட்டது.

கரூர்,

கரூர் மாவட்டத்தில் 360 கூட்டுறவு சங்கங்களுக்கு 4 கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. முதல் கட்டமாக 64 கூட்டுறவு சங்கங்களுக்கு வேட்பு மனு தாக்கல் நேற்று நடந்தது. கரூர் ராமகிருஷ்ணபுரத்தில் உள்ள கூட்டுறவு வீடு கட்டும் சங்கத்தில், 11 இயக்குனர்கள் பதவிக்கான வேட்பு மனு தாக்கல் நேற்று நடந்தது.

அ.தி.மு.க.வை சேர்ந்தவர்கள் வேட்பு மனு தாக்கல் செய்வதற்காக சங்க அலுவலகம் முன்பு காலை 11.30 மணி அளவில் வந்து நின்றனர். சிறிது நேரத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை சேர்ந்தவரும், சங்கத்தின் தற்போதைய தலைவருமான ராஜாவும், அவருடன் கட்சி நிர்வாகிகளும் வந்தனர். வேட்பு மனு தாக்கல் செய்ய அ.தி.மு.க.வை சேர்ந்தவர்கள் சங்க அலுவலகத்தின் உள்ளே முதலில் சென்றனர்.

அப்போது அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினரும் வேட்பு மனு தாக்கல் செய்ய அலுவலகத்தின் உள்ளே செல்ல முயன்றனர். அவர்களை பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தடுத்து நிறுத்தினர். மேலும் அலுவலகத்திற்கு செல்லக்கூடிய மாடிப்படியின் ஷட்டர் கதவை இழுத்து மூடினர். அ.தி.மு.க.வினர் வேட்பு மனு தாக்கல் செய்து முடித்து வெளியே வந்த பின் அனுமதிப்பதாக அவர்களிடம் போலீசார் தெரிவித்தனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை சேர்ந்தவர்கள் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் சங்க அலுவலகத்திற்கு செல்லும் மாடிப்படியின் முன்பு தரையில் அமர்ந்து கொண்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தின் போது போலீசாருக்கு எதிராகவும், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோருக்கு எதிராகவும் கோஷம் எழுப்பினர். இதனால் வேட்பு மனு தாக்கல் செய்பவர்களை மட்டும் அலுவலகத்திற்கு உள்ளே அனுமதித்தனர். இதையடுத்து ராஜா உள்பட சிலர் மனு தாக்கல் செய்ய சென்றனர். இதனால் மகிழ்ச்சியில் அவர்கள் டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவாகவும், அ.தி.மு.க.வுக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பினர்.

இதைக்கண்ட அங்கு திரண்டிருந்த அ.தி.மு.க.வினர் ஆவேசமடைந்து டி.டி.வி.தினகரன், முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி ஆகியோருக்கு எதிராக கோஷம் எழுப்பினர். இருதரப்பினரும் கடுமையான வார்த்தைகளால் கோஷங்களை எழுப்பினர். ஒருவரையொருவர் திட்டிக்கொண்டனர்.

அப்போது திடீரென இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை சேர்ந்த நிர்வாகிகளை அ.தி.மு.க.வினர் விரட்டி சென்று தாக்க முயன்றனர். பதிலுக்கு அவர்களும் தாக்க முயன்றனர். இதனால் அந்த இடமே கலவரமானது.

அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த துணை போலீஸ் சூப்பிரண்டு கும்மராஜா, இன்ஸ்பெக்டர்கள் செந்தில்குமார், செந்தில்குமரன் மற்றும் போலீசார் விரைந்து வந்து இருதரப்பினரையும் விலக்கிவிட்டனர். இருப்பினும் இருதரப்பினரும் ஒருவரையொருவர் வார்த்தைகளால் கடுமையாக திட்டிக்கொண்டனர். இதனால் மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவானது.

இதையடுத்து கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டு குவிக்கப்பட்டனர். அ.தி.மு.க.வினரை போலீசார் ஒருபுறம் தடுத்து நிறுத்தினர். மற்றொரு புறம் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினரை கலைந்து செல்ல அறிவுறுத்தினர். தொடர்ந்து அ.தி.மு.க.வை விமர்சித்து பேசிய அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகிகளை அ.தி.மு.க.வினர் அடிக்க பாய்ந்தனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

இதற்கிடையே போலீஸ் பஸ்சை வரவழைத்து மோதல் ஏற்பட்ட இடத்தின் நடுவே போலீசார் நிறுத்தி வைத்தனர். அப்போது கூட்டத்தில் இருந்து ஒருவர் திடீரென செங்கலை தூக்கி போலீஸ் பஸ் மீது வீசினார். இதில் பஸ்சின் முன்பக்க கண்ணாடி மீது விழுந்த செங்கல் துகளானது. இதனைக்கண்ட போலீசார் சம்பந்தப்பட்ட நபரை பிடிக்க முயன்ற போது, தள்ளு-முள்ளு ஏற்பட்டது. இதற்கிடையில் துணை போலீஸ் சூப்பிரண்டு கும்மராஜாவின் ஜீப்பின் கண்ணாடி மீது மற்றொருவர் கல் வீசி தாக்கினார். இதில் ஜீப்பின் முன்பக்க கண்ணாடி சேதமடைந்தது. போலீசார் உடனே அந்த ஜீப்பை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

வேட்பு மனு தாக்கலில் ஏற்பட்ட மோதலால் பெரும் கலவரமாகும் சூழ்நிலை உருவானது. இதற்கிடையில் கூட்டுறவு சங்க அலுவலகத்திலும் அ.தி.மு.க.வினருக்கும், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது சங்க அலுவலகத்தின் கண்ணாடியை உடைத்தனர். பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் விரைந்து சென்று, அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை சேர்ந்த ராஜா, விஜயகுமார் உள்பட 8 பேரை கைது செய்து, போலீஸ் வேனில் ஏற்றி சென்றனர். கைதானவர்களில் விஜயகுமார் உதட்டில் இருந்து ரத்தம் வழிந்தபடி வந்தார். கைதானவர்களை தாந்தோன்றிமலையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். இந்த மோதல் சம்பவத்தால் கரூரில் நேற்று பரபரப்பு ஏற்பட்டது.

கைதானவர்களை முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி மண்டபத்தில் சந்தித்து பேசினார். பின்னர் வெளியே வந்த அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்த போது கூறியதாவது:-

கூட்டுறவு சங்க தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்ய எங்கள் கட்சியை சேர்ந்த 11 பேரை போலீசார் தாக்கி விரட்டி அடித்துள்ளனர். தாக்குதலில் காயமடைந்த விஜயகுமாரை மருத்துவமனைக்கு கூட போலீசார் அழைத்து செல்லவில்லை. போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பின் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று சிகிச்சை அளித்துள்ளனர். போலீஸ் வாகனங்கள் மீது ஆளுங்கட்சியினர் கல்வீசி தாக்கி உள்ளனர். போலீசாரும் கண்ணாடியை உடைத்து விட்டு, எங்கள் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் மீது குற்றம் சுமத்துகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக அ.தி.மு.க. நகர செயலாளர் நெடுஞ்செழியன் நிருபர்களுக்கு பேட்டியளித்த போது கூறுகையில், “அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்த இடத்தில் தகராறில் ஈடுபட்டு எங்களை தாக்க முயன்றனர். சங்க அலுவலகத்தின் கண்ணாடியை உடைத்தனர். போலீசார் உரிய நேரத்தில் வந்து எங்களை காப்பாற்றினர்” என்றார்.

இந்த நிலையில் கைதானவர்களில் ராஜா உள்பட 7 பேரை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைக்க ஏற்பாடு செய்தனர். காயமடைந்த விஜயகுமார் கரூர் அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டார். மேலும் 23 பேர் மீது கரூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மொத்தம் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

Next Story